பக்கம்:தமிழக வரலாறு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர் காலத்துத் தமிழகம்

211


னத்தையும் பேணிப் பாதுகாத்து வளர்த்த பெருமை பல்லவருக்கே உண்டு. நடன நிலைகளைச் சிற்றுளியால் கல்லில் செதுக்குவித்து அவை நிலைகெடாத ஆசிரியர்களைப் போன்று பின் வருவோர்க்கெல்லாம் பாடம் கற்பிக்கும் வழியில் உதவிய பல்லவர் தொண்டைப் போற்றத்தானே வேண்டும்! தேவாரத்தில் வரும் எத்தனையோ இசைக் கருவிகளைப் பற்றி இன்று நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அதே போன்று தேவாரப் பண்களைப் பற்றித் திட்டமாக அறியவும் முடியவில்லையே! இவையெல்லாம் அக்காலத்தில் இசை சிறந்த நிலையில் விளங்கி இருந்தது என்பதையன்றோ காட்டுகின்றன! கோயில்களிலே அமைக்கப் பெற்ற நடன உருவங்கள்தாம் எத்தனை!

சமய நிலை:

இவ்வாறு கலைகளையும் கல்வியையும் போற்றி வளர்த்த பல்லவர்கள் சமயத்தையும் வளர்த்தவர்கள். என்பதை ஒவ்வொருவர் தனித்த வரலாற்றிலும் கண்டோம். சைவம், வைணவம் என்ற இரு சமயங்களையும் தூக்கி நிறுத்திய பெருமை அவர்களுடையதே. அத்துடன் ஓரிருவர் தவிர மற்றவர்களெல்லாம் பெளத்த சமணத்தையும் வெறுக்காது அவைகளுக்கும் ஆக்கம் அளித்து வந்தார்கள் என்பதும் புலனாகின்றது. கோயில்களின் அமைப்பை உருவாக்கிய பெருமை பல்லவர்களுடையதே. கருங்கற்பாறைகளைக் குடைந்தும் அகழ்ந்தும் கோயிலாக்கியும், பின் அக்கருங்கற்களைப் பிளந்தெடுத்துக் கோயில் கட்டியும் சமயத்தோடு கலையையும் பிறவற்றையும் வளர்த்தவர். பல்லவர். முதல் முதல் கல்வெட்டுக்களையும் செப்புப் பட்டயங்களையும் உருவாக்கி, அவற்றை வரலாற்றில் வாழ வைக்கும் துணைக் கருவிகளாக்கிய பெருமையும் அவர்களுடையது. இவ்வாறு எல்லா வகையிலும் தமிழ் நாகரிகம் முதலியவற்றையும் பேணிப் பாதுகாத்துத் தந்த பல்லவர் வரலாறு தமிழ்நாட்டு வரலாற்று ஏடுகளில் முக்கிய இடம் பெறுவது திண்ணம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/213&oldid=1358586" இலிருந்து மீள்விக்கப்பட்டது