பக்கம்:தமிழக வரலாறு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

219


ஆதித்தன் ஆட்சி பரவி இருந்தது. காளத்திக்கு அருகில் உள்ள தொண்டைமான் பேராற்றில் கி. பி. 907 இல் ஆதித்தன் இறக்கப் பராந்தகன் பட்டமெய்தினான்.

பராந்தகன்: பராந்தகன் நெடுங்காலம் (கி. பி. 907.943) அரசாண்டான். இவன் சோழ நாட்டு எல்லையை மேலும் பெருக்கினான். சோழ நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு மூன்றும் இவன் ஆணையின் கீழ் இருந்தன. இவன் பாண்டி நாட்டின்மேல் படையெடுத்தான் இவன் ‘மதுரை கொண்ட கோப்பரகேசரி’ என்ற சிறப்புப் பெயர் பெற்றமையின், கி. பி 910இல் மதுரையைக் கைக் கொண்டவன் எனலாம், அப்போது மதுரையில் மூன்றாம் இராசசிம்மன் அரசாண்டான். பராந்தகன் அவனை வென்றான். எனினும், பாண்டியன் ஈழமன்னன் ஐந்தாம் காசியபன் துணையை நாட, அவனும் பெரும் படை அனுப்பினான். பாண்டியன் படையும் சோழர் படையும் வெள்ளூரில் எதிர்ந்தன எனினும், பராந்தகனே மீண்டும் வெற்றி பெற்று மதுரை கொண்டான். இச்செய்திகளை ஈழநாட்டு வரலாறுகளும், மகாவமிசமும், இரண்டாம் பிருதிவிபதியின் செப்பேடுகளும் குறிக்கின்றன. மேலும் இராசசிம்மனது சின்னமனூர்ச் செப்பேடுகள் அப்பாண்டியன் வெற்றியைப் பாராட்டுகின்றன. இவற்றால் பாண்டிய சோழருக்குள் பல போர்கள் நடந்திருக்க வேண்டுமெனவும், ஒன்றில் பாண்டியன் வெற்றி பெற்றிருக்கக்கூடும் எனவும் அறிய வேண்டியுள்ளது. இறுதியாகிய வெள்ளூர்ப் போர் 919இல் நடைபெற்றதாக வேண்டும் என்பர் ஆய்வாளர்[1]


  1. பாண்டியர் வரலாறு-சதாசிவபண்டாரத்தார், பக். 36
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/221&oldid=1358734" இலிருந்து மீள்விக்கப்பட்டது