பக்கம்:தமிழக வரலாறு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

221


முதலியோரையும் வென்றான். இப்படித் தெற்கே ஈழ முதல் வடக்கே நெல்லூருக்கும் அப்பால் வரை பராந்தகனின் நாடு பரவி நின்றது. இப்பராந்தகன் மகட் கொண்டும் மகட் கொடுத்தும் இராட்டிரகூட மன்னருடன் கலந்தமையின், அவர்களுக்குள் நடந்த அரசியல் போரில் இவனும் தலையிட நேர்ந்தது. பராந்தகன் தன் மருகன் கோவிந்தன் நாடிழந்து தஞ்சைக்கு வர, அதை மீட்டுத் தருவதற்காக இராட்டிரகூட நாட்டின் கிருஷ்ணன் மீது பகை கொண்டான். வடக்கே இருந்த வேற்று வேந்தர்களும் இந்நிலையில் பராந்தகனுக்குப் பகைவராயினர். பராந்தகனும் தன் மகனுடன் படையனுப்பி வட எல்லையைப் பாதுகாத்தான். இராட்டிரகூட கிருஷ்ணன் 949ல் சோணாட்டின் மேல் படை எடுக்க, தொண்டை நாடும் திருமுனைப்பாடி நாடும் அவன் வசமாயின. கி.பி. 955க்குப் பின் சோழர் கல்வெட்டுக்கள் அப்பகுதிகளில் இல்லை. நடுநாடு தனியாக உரிமை எய்தியது. மூன்றாம் கிருஷ்ணன் தஞ்சையைக் கைப்பற்றி இராமேச்சுவரத்தில் கல் நாட்டியவன் என்று கூறப்பட்டாலும், அதற்குச் சான்றுகள் இல்லை. மூன்றாம் கிருஷ்ணனோடு தக்கோலத்தில் நடந்த போரில் பராந்தகனுடைய மூத்த மகன் இராசாதித்தன் இறந்தான். எனவே, பராந்தகனுக்குப் பின் அவன் இரண்டாம் மகன் கண்டராதித்தன் (950) பட்டத்துக்கு வந்தான்.

பராந்தகன் சிறந்த சிவபக்தனாய் இருந்தான். திருவிசைப்பா அவனைப் பாராட்டுகின்றபடி திருவாவடு துறை, செந்துறை முதலிய இடங்களில் கோயில்கள் அமைத்தான்; வீரநாராயண ஏரி, சதுர்வேதிமங்கல ஏரி, சோழ வாரிதி, சோழசிங்கபுரத்தேரி முதலிய பேரேரிகளை வெட்டு வித்து, நாட்டில் நீர்ப்பாசன வசதிகள் செய்தான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/223&oldid=1358746" இலிருந்து மீள்விக்கப்பட்டது