பக்கம்:தமிழக வரலாறு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

தமிழக வரலாறு


உதவியாக ஈழ மன்னன் நான்காம் மகிந்தன் தன் படையை அனுப்பினான். எனவே, சீற்றமுற்ற சுந்தரசோழன், தன்படைத் தலைவனின் மகன் பாரந்தகன் சிறிய வேளான் என்பானுடன் பெருஞ் சேனையை ஈழத்துக்கு அனுப்பினான். ஆயினும், படைத்தலைவன் அங்கு உயிர் துறந்தான். மகாவமிசத்தின் வழி, பின்பு சோழரும் ஈழ மன்னரும் நட்பாயினர் எனக் காண்கின்றோம். பாண்டியன் மறுபடியும் தலைதூக்கிச் சோழரோடு போரிட்டான். சுந்தர சோழன் மகன் ஆதித்த கரிகாலன் அவனை எதிர்த்து வென்றான். எனினும் மதுரையைக் கைக்கொள்ளவில்லை.

சுந்தரசோழன் வடக்கேயும் படையெடுத்து இழந்த தொண்டை நாட்டையும் நடு நாட்டையும் மீட்டான். அவற்றை ஆளப் பார்த்திவேந்திரவர்மனை நியமித்தான். இச் சுந்தரசோழன் மனைவியர் இருவர். ஒருத்தி சேரன் மகள்; மற்றொருத்தி திருக்கோவலூர் மன்னன் மகள். இவன் தன் மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்குக் கி. பி. 966இல் இளவரசு பட்டம் கட்டினான். இவனுடைய இரண்டாம் மகனே சிறக்கவாழ்ந்த முதலாம் இராசராசன். இவன் மகள் குந்தவ்வை. அவள் கீழைச்சாளுக்கிய மன்னன் வல்லவரையன் வந்தியத்தேவனுக்கு மனைவியானாள். வல்லவரையன் மனைவியோடு சோழ நாட்டிலே தங்கிவிட்டான்.

அமைச்சராகச் சுந்தர சோழனுக்கு உதவியவர் அன்பில் அநிருத்திரப் பிரமாதிராயர். அவருக்குக் கருணாகர மங்கலத்தை (திருவழுந்துார் நாடு) இறையிலியாகக் கொடுத்தான் மன்னன். இதை விளக்குவதே அன்பிற்செப்பேடு. இதுவே சோழர் சேப்பேடுகளில் மிகப் பழமையானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/226&oldid=1358758" இலிருந்து மீள்விக்கப்பட்டது