பக்கம்:தமிழக வரலாறு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

தமிழக வரலாறு


தந்தை உத்தம சோழனுக்குப்பின் 985இல் பட்டத்துக்கு வந்தான்; இராசகேசரி என்ற பட்டம் புனைந்தான். இவன் செய்துவைத்த பல பணிகளும், வெற்றிகளும் இவன் மகன் இராசேந்திரனை மிக உயர்ந்தவனாக்க வழி கோலி நின்றன. இளமையில் பெற்றோரை இழந்த இராசராசனைக் கண்டராதித்தரும் தமக்கை குந்தவ்வையும் வளர்த்தனர் எனலாம்.

போர்ச் செயல்கள்:

இவன் காலத்திலேதான் கல்வெட்டுக்கள் மேல் கண்ட இலக்கணப்படி அகவற்பாவில் உருவாக்கப் பெற்றன. இவனது மெய்க்கீர்த்திகளில் இவன் காந்தளூர்ச்சாலையில் கலமறுத்த வரலாறே சிறக்கப் புகழப்பெற்றுள்ளது. காந்தளூர்ச்சாலை திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி என்பர். அக்காலத்தில் சேரநாட்டை ஆண்ட மன்னன் பாஸ்கர இரவிவர்மன் (978—1036) ஆவன். அவன் சோழர் தூதனைச் சிறைப் பிடித்து உதகையில் வைத்திருந்தான். உதகை என்பது இக்கால உதகமண்டல மன்று; நாகர் கோயில் பக்கத்திலுள்ள ஒரு சிற்றூர். அதை அடுத்து இருந்ததே காந்தளூர்ச்சாலை. இராசராசன் படை எடுத்துச் சென்று காந்தளூர்க் கலமறுத்து வெற்றிகொண்டு தன் தூதனையும் மீட்டு வந்தான். உதகையில் கடல் நடுவே கலங்களில் தூதுவன் வைக்கப்பட்டான் போலும்! எனவே, அவற்றை அழித்துத் தூதுவனை மீட்டுவந்தான் இராசராசன் என்பது பொருந்தும்.

சேர நாட்டுக் காந்தளூருக்குச் சோழன் செல்ல வேண்டுமாயின், அவன் பாண்டி நாட்டு எல்லையைக் கடந்தே செல்ல வேண்டும். அக்காலத்தில் பாண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/230&oldid=1358784" இலிருந்து மீள்விக்கப்பட்டது