பக்கம்:தமிழக வரலாறு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

தமிழக வரலாறு


கொள்ளத் தகும். ஆய்வாளர் இதுபற்றி மேலும் ஆய்ந்து முடிவு காண வேண்டும். இவ்வாறு கோயில் அமைத்து அழியாப் புகழ் பெற்ற இராசராசன், சிவபாத சேகரன் எனப் போற்றப்பட்டான் ‘சிவனுடைய பாதங்களைத் தலையில் தாங்கியவன்’ என்பது இதன் பொருள். இவன் சிறந்த சைவனேயாயினும், பிற சமயங்களை வெறுத்தானல்லன் இவன் காலத்தில் கடாரத் தரசன் சூளாமணி வர்மன் நாகப்பட்டினத்தில் சைனர்களுக்காகக் கட்டிய கோயிலை ‘இராசராசப் பள்ளி’ என்றே வணங்கியமை இவன் பரந்த நோக்கை நமக்குக் காட்டுமன்றோ! இவன் திருமாலுக்குச் ‘சயங்கொண்ட சோழ விண்ணகரம்’ எனப் பங்களூர் மாவட்ட மணவூரில் ஒரு கோயிலும், தலைக்காட்டுக்கு அருகில் மற்றொரு கோயிலும் அமைத்தான் என்றும் கூறுவர்.[1] எனவே, இவன் சமயக் காழ்ப்பு அற்ற சிறந்த மன்னனாய் விளங்கியவன் என்பது பெறப்படும்.

நில அளவை:

இவன் காலத்தில் தமிழ்நாடு பல நன்மைகளைப் பெற்றது என்றோம். அவற்றுள் ஒன்று நில அளவை. சோழ இராச்சியத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் இவன் காலத்தில் (கி பி. 1000இல்) அளக்கப்பெற்றன. அதனால், இவன் ‘உலகளந்தான்’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றான். அந்த அளவுகோல் 16 சாண் நீளம் இருந்ததாம். ‘மாராயன்’ என்ற பெயர் அதற்கு உண்டு என்பர். இவ்வாறு நிலத்தை அளந்து பிரித்துப் பல்வேறு வகையில் நிலத்தின் தரம் கண்டதோடு, நீர்ப்பாசன வசதிகளும் செய்தமைத்து நல்ல விளையுளைப் பெருக்கினான் இராசராசன்.


  1. பிற்காலச் சோழர்-சதாசிவபண்டாரத்தார், பக்கம்138
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/236&oldid=1358813" இலிருந்து மீள்விக்கப்பட்டது