பக்கம்:தமிழக வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தமிழக வரலாறு


தான். மனித சமுதாயத்தின் வரலாற்றிலே எத்தனையோ இருண்ட பாகங்களும் உள்ளன. ஏன்? தமிழ்நாட்டு வரலாற்றிலேயுங்கூட எத்தனையோ இருண்டகாலப் பிரிவுகள் உள்ள்ன. வரலாற்றைத் தொகுக்கும் ஆசிரியன் அந்த இடைவெளிகளை அப்படி அப்படியே விட்டுச் செல்வானாயின், கதைப் போக்கின் இடையிடையே துண்டுபட்டுச் சுவை குன்றுவது போன்ற உணர்ச்சி தோன்றுமல்லவா? அதே உணர்ச்சி இங்கும் தோன்றி வரலாற்றை முறைப்படி கற்கத் தடை ஏற்படுத்தும். எனவே, வரலாற்று ஆசிரியன் அந்த இருண்ட இடைக்காலங்களைக் கூடுமான வரையில் ஆராய்ந்து வரலாற்றுத் தொடர்பு கெடாமல் எழுத முயல வேண்டும் ஒருவேளை அக்காலங்களுக்கு உரிய நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பு ஒன்றும் கிடைக்கவில்லையாயினும், உள்ளதை வைத்துக் கொண்டு, வரலாற்றுத் தொடர்பு கெடாத வகையில்–பயில்வார்க்குச் சுவை கெடாத வகையில்–எழுத வேண்டும். அப்போது தான் அது உண்மையான வரலாறு ஆகும்.

வரலாறு எழுதும் ஆசிரியர்கள் நடுவு நிலையாளர்களாய் இருக்கவேண்டும். விருப்பு வெறுப்பு அற்று நேரிய நிலையில் இருந்து அவர்கள் வரலாற்றை எழுத வேண்டும். தமக்கு வேண்டிய அல்லது தம் கருத்துக்கு ஏற்ற பொருள்களைப்பற்றிச் சீர்தூக்கியும், அல்லாதவற்றைத் தாழ்த்தியும் எழுதப்பெறும் வரலாற்று நூல்கள் உயர்ந்தனவாகா. வரலாறே சென்ற கால நிகழ்ச்சிகளை என்றென்றும் உலகில் வாழ வைப்பது. ஆதலால், அவ்வரலாற்றை ஒழுங்கு படுத்தி எழுத வேண்டும். காலக் கணிப்பில் பல வரலாற்று ஆசிரியர்கள் மாறுபடுவதைக் காண்கின்றோம். தமக்கு வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/26&oldid=1356998" இலிருந்து மீள்விக்கப்பட்டது