பக்கம்:தமிழக வரலாறு.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்கால சோழர் எழுச்சி

261



பத்தன். இவன் இறைவனால் 'நம் தோழன்' என வழங்கப் பெற்றான் என்பதைத் திருவாரூர்க் கல்வெட்டு ஒன்றால் அறியலாம். இவன் பல கோயில்கள் கட்டினான். இவன் திரிபுவனன் ஆனமையின், திருவிடைமருதூர்ப் பக்கத்தில் 'திரிபுவன வீரேச்சுரம்' என்ற கோயிலைக் கட்டினான்; தில்லையில் பொன் வேய்ந்தான். இவன் சைவனாயினும், பிற சமயங்களையும் வெறுக்காமல் வளர்த்தான்; சைனப் பள்ளிகளுக்கும் இறையிலியாக நிலங்களை விட்டான்.

இவன் தலைநகரும் கங்கைகொண்ட சோழபுரமே. பழையாறை இரண்டாந் தலைநகராகவும், விக்கிரம சோழபுரம் சில காலம் தங்குமிடமாகவும் இருந்தன. இவன் பட்டத்தரசி புவனமுழுதுடையாள். வேறொரு மனைவியும் இருந்தனர். இவனை அடுத்து இவன் மகன் இராசராசனே பட்டத்துக்கு வந்தான்.

இவன் பல புலவர்களை ஆதரித்த வள்ளல். நேமி நாதம் இயற்றிய குணவீர பண்டிதர், வச்சணந்தி மாலை இயற்றிய வச்சணந்தி முனிவர், நன்னூல் இயற்றிய பவணந்தியார் போன்ற இலக்கணப் புலவரும் வேறு பல புலவரும் இவன் காலத்தவர் என்பர். இவன் அவைக்களப் புலவராகிய வீராந்தகப் பல்லவராயர் பல பிரபந்தங்கள் பாடினார். இவன் காலத்தில் பாரதம் தமிழில் பெயர்த் தெழுதப்பட்டது.

சேக்கிழார் இவன் காலத்தில் பெரிய புராணம் பாடினர் என்பர் சிலர்:[1]இரண்டாங் குலோத்துங்கன் காலத்தில் இருந்தவர் என்பர் சிலர்: கம்பருக்கு முற்பட்டவர் என்பது பலர் கருத்து. இவன் முன்னோரைப் போலவே இவனுக்கும் பல சிறப்புப் பெயர்கள் இருந்தன. வீரராசேந்திரன், முடிவழங்கு சோழன், சோழ கேரளன்,


  1. 4

4. பிற்காலச் சோழர், பண்டாரத்தார். பக்கம் 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/263&oldid=1357930" இலிருந்து மீள்விக்கப்பட்டது