பக்கம்:தமிழக வரலாறு.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

தமிழக வரலாறு



அதற்குக் கழுவாயாகக் கோயிலுக்கு விளக்கிட்டான் எனக் கூறுகின்றது. எனினும், வரிகொடா நிலைமை எல்லை கடப்பின் உரிய நிலத்தை ஏலமிடுவதும் உண்டு. விளையாவிட்டால் வரி கழிப்பும் இருந்தது. விளையும் பொருள்களை மக்கள் அளவுக்கு மீறிச் சேர்த்து வைத்தார்கள் என்று சொல்லவும் இயலாது. பொதுப் பணிகளுக்கு மக்கள் தாராளமாக உதவினார்கள் எனலாம்.

சமுதாய மாறுதல்கள்:

சமுதாயத்தில் பல புதுப்புது வகையான மாறுதல்கள் புகுந்துவிட்டன. ‘ஒன்றே குலம்' என்று சங்க காலத்தில் கண்ட தமிழ் நாட்டில், இருண்ட காலத்தில் புகுந்த சாதி சமய வேறுபாடுகள் இக்காலத்தில் நன்கு வளர்ந்து விட்டன எனலாம். பரம்பரையாகக் குலத்தொழில் செய்யும் முறையும் வந்துவிட்டது. என்றாலும், இரண்டொரு விதி விலக்குகளும் இருந்தன. சங்க காலத்தைக் காட்டிலும் இக்காலத்தில் சமுதாயப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வளர்ந்து விட்டன. எனினும், அனைவரும் கூடியே வாழ்ந்தனர். வேளாளர் அனைவரினும் சிறப்புற்று விளங்கினர். அந்தணர் தானம் பெற்றனர். கலப்புச் சாதிகளும் இக்காலத்தில் உருவாயின. எனினும், வடவரை ஒட்டிய நால்வகை வருணத்தின் வழியே மக்கள் வாழ்ந்தார்கள் என்று கொள்ள இயலாது. பெண்டிரும் சொத்துக்கு உரிமை உடையவராயிருந்தனர் அரசியர் தத்தம் சொத்துக்களால் பலப்பல தானங்கள் செய்ததைக் கண்டோம். வறிய பெண்கள் பணிப்பெண்களாய் இருந்தார்கள். இரண்டொருவர் கணவரோடு உடன் கட்டையேறினும், அது நாட்டு வழக்கமாய் இருந்ததில்லை. தேவதாசி முறையும் அடிமை வாழ்வு முறையும் நாட்டில் இருந்தன. கூலிகளும் அடிமைகளும் நாட்டில் நிரம்ப இருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/280&oldid=1358044" இலிருந்து மீள்விக்கப்பட்டது