பக்கம்:தமிழக வரலாறு.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

தமிழக வரலாறு



குலசேகரன் காலத்து ஐந்து பாண்டியர் எனப் பிரிக்கப்பட்ட பிரிவு மறுபடியும் ஒன்று சேரவில்லை போலும்! அவர்கள் தங்களுள் மாறுபட்ட காரணத்தால் போர் நிகழ்ந்தது போலும்; தோற்றவர் வெல்வதற்கு வெளியில் உள்ளவரை வலியச் சென்றுத் தம் நாட்டுக்கு அழைத்து வந்தனர். போரில் தோற்ற சுந்தர பாண்டியன் என்பவனே வலியச்சென்று முதன்முதல் அல்லாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக் காபூரைத் தமிழ்நாட்டுக்கு அழைந்து வந்தான். சுத்தரபாண்டியன் பகைவன் வீர பாண்டியனே. தன் உடன்பிறந்தவனோடு மாறுபட்டு அதற்காக எங்கோ இருந்த அல்லாவுதீனை அடைக்கலம் புகுந்து, அவன் படைத்தலைவனான மாலிக்கபூரை அன்று சுந்தரபாண்டியன் அழைத்து வந்தான். அது முதல் தமிழ்நாடு தமிழ் மன்னரின் கீழ் வாழும் நிலை இழந்தது எனலாம். சுந்தரபாண்டியன் தில்லி அல்லாவுதீனை நாடியதும் அவன் மாலிக்கபூரை அனுப்பியதும் 'வாசப்' குறிப்பிலிருந்தும் கர்னல் ‘யூல்’ குறிப்பிலிருந்தும் நன்கு புலனாகின்றன, மாலிக்கபூர் பாண்டிநாடு வந்து நாட்டைக் கொள்ளையிட்டான்; குழப்பத்தை உண்டாக்கினான். எனினும் வாசப், மாலிக்கபூரின் படை எடுப்பைச் சுந்தரபாண்டியனுடைய தில்லி அடை கலத்தோடு ஒன்று படுத்திக் கூறவில்லை. எப்படியோ பாண்டியநாட்டின்தமிழ்நாட்டின்-அமைதி குலைந்துவிட்டது. பதினான்காம் நூற்றாண்டு முழுவதும் தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்றே புரிந்துகொள்ள முடியாத வகையில் நாட்டில் பலப் பல அயலவர் படை எடுப்புக்களும் குழப்பங்களும் தொல்லைகளும் நிகழ்ந்து கொண்டே இருந்தனபோலும். மாலிக்கபூரின் தலைமையில் வந்த படைகள் இருவரையுமே துன்புறுத்தின எனலாம். நாடு சூறையாடப்பெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/296&oldid=1358440" இலிருந்து மீள்விக்கப்பட்டது