பக்கம்:தமிழக வரலாறு.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர வேந்தரும் மராட்டியரும்

321

மதுரையில் வசந்த மண்டபமும், கோபுரங்களும், மதுரைக் கோயிலின் பல பணிகளும் இக்காலத்தில் அமைக்கப்பெற்றனவே. இவற்றைப்பற்றி வரலாற்று ஆசிரியர்கள் பலப்பலவாறு எழுதியுள்ளனர். புது மண்டபத்தில் பத்து நாயக்கர் மன்னர் உருவங்கள் உள்ளன. அவை உயிருள்ளன போன்றே காட்சியளிப்பது வியப்புக் குரியதாகும். தென்னாட்டுக் கலைக்கூடமே என அப்புது மண்டபம் பொலிகின்றது.

சமணருக்கும் விசயநகர வேந்தர் பலவகையில் உதவினர் எனக் கண்டோம். அவற்றுள் ஒன்று அவர்கள் காஞ்சிக் கருகில் சைனகாஞ்சியில் கட்டிய சைனக் கோயிலாகும். அது திருப்பருத்திக்குன்றம் என்ற சிற்றுாரில் இடம் பெற்றுள்ளது. வர்த்தமானரின் முன் இசை முழங்கும் சங்கீத மண்டபம் அழகாக அமைக்கப் பெற்றுள்ளது. அம்மண்டபத்தில் மூன்று தீர்த்தங்கரர்களைப்பற்றி அழகாகத் தீட்டப்பட்ட வண்ண ஒவியங்கள் இன்றும் தன்மை கெடா வகையில் சிறக்கக் காட்சியளிக்கின்றன.

மாற்று ஆட்சி:

இவ்வாறு பல துறைகளிலும் தமிழ்நாட்டை வளர விட்டு அதன் நலம் குன்றாவகையில் பாதுகாத்த விசய நகர வேந்தர்களும், பின் வந்த கர்நாடக நவாபுகளுக்கும் அவரைத் தொடர்ந்து வந்த மேலைநாட்டினருக்கும் இடம் விட்டு விலகவேண்டியதாயிற்று. இவருடன் ஒருங்கு சிற்றரசர்களாய் இருந்த தஞ்சை, செஞ்சி, மதுரை மராட்டியரும் நாயக்கருங்கூடப் பதினேழாம் நூற்றாண்டுடன் தம் நிலைகெட மறைந்தனர் எனலாம். எனவே, கர்நாடக நவாபு ஆட்சியும் அடுத்த ஆங்கில ஆட்சித் தொடக்கமும் தமிழ்நாட்டில் எவ்வாறு இயங்கின என்பதை இனிக் காண்போம்

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/323&oldid=1358650" இலிருந்து மீள்விக்கப்பட்டது