பக்கம்:தமிழக வரலாறு.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

தமிழக வரலாறு


சொல்ல இயலாது. நாட்டில் பல்வேறு குழப்பங்களும் சிறு சிறு போர்களும் இருந்தன எனலாம். இக்காலத்திலெல்லாம் தமிழ்நாடு தனித்து இயங்காத காரணத்தால் வடநாட்டில் சிறு மாறுதல் வந்தாலும், அது தமிழ்நாட்டையும் பாதிக்கும் வகையில் அமைந்து விட்டது மெள்ள மெள்ள மக்கள் மனத்தில் ஒரே இனக் கொள்கை உருப்பெறலாயிற்று, தெற்கே தமிழ் நாட்டை மட்டும் தனித்த உறுப்பு நாடாகவும் செய்யவில்லை ஆங்கிலேயர்கள். தாம் புதிதாகக் கட்டிய கோட்டை உள்ளிட்ட சென்னை நகரைத் தலைநகராகக் கொண்டு சென்னை மாகாணத்தை நிறுவினார்கள். மதுரையும் வஞ்சியும், உறந்தையும், தஞ்சையும், பழையாறையும் கங்கைகொண்ட சோழபுரமும், காஞ்சிபுரமும் பிறவும் வறிதே செல்லப் புதிதாகத் தோன்றிய சென்னை மாநகரம் தலைநகராயிற்று. ஆங்கிலேயர் வாணிபக் குறிக்கோளுடன் வந்தவர்களானமையின், கடற்கரைப் பட்டினங்களையே வளர்க்க முற்பட்டனர். வாணிபப் பொருள் மட்டுமின்றி, தங்களுக்கு வேண்டிய போர்க்கருவி முதலியனவும் தம் நாட்டிலிருந்தும், பிறநேசநாடுகளிலிருந்தும் கடல் வழியாக வரவேண்டி இருந்தமையின் கடற்கரைப் பட்டினங்களாகிய சென்னை, பம்பாய், கல்கத்தா போன்ற பெரு நகரங்களை வளர்த்தனர். அவர்கள் ஆட்சி இல்லையானால் நம் நாட்டுக்கு–சிறப்பாகத் தமிழ் நாட்டிற்குப் பல நன்மைகள் இல்லையாகச் சென்றிருக்கும் அவர்கள் செய்த நன்மைகளுள் ஒன்று சென்னையை வளர்த்ததோடு, துறைமுகத்துக்கு வழியற்றிருந்த போதிலும், அதைச் செயற்கை வகையில் சிறந்த துறைமுகமாக்கியதாகும். அன்று முதல் இன்று வரையிலும் சென்னை சிறந்த துறைமுகமாய்ச் செயலாற்றுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/342&oldid=1359035" இலிருந்து மீள்விக்கப்பட்டது