பக்கம்:தமிழக வரலாறு.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XIX விடுதலைக்கு முன்னும் பின்னும்

தம் வரலாறு அற்ற தமிழகம்:

தென்னாட்டில் மைசூர்ச்சுல்தானை 1799ல் அடியோடு முறியடித்து, வடக்கே மராட்டியரை 1818ல் முற்றும் தோற்கடித்தபின் ஆங்கிலேயக் கம்பெனியார் இந்தியாவில் எதிர்ப்பார்யாருமின்றியே ஆணை செலுத்தத் தொடங்கினர். எனினும், அவ்வப்போது நேர்ந்த உள்நாட்டுக் கலகங்களும் வேறு சில குழப்பங்களும் அவர்களை நிலை கொள்ளா வகையில் துன்புறுத்தி வந்தன எனலாம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்த பின் தமிழ் நாட்டுக்கென்று தனி வரலாறு இல்லையாயிற்று. ஆங்கிலேயர்கள் நேரடியாகவும் பல சிற்றரசர்களின் வழியும் குமரி முதல் இமயம் வரையில் ஒரே நாடு என்ற உணர்வில் ஆட்சியைத் தொடங்கிவிட்டனர். பல்வேறு மொழி, கலாசாரம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றில் வேறுபட்டு நின்ற பரந்த இந்திய நாட்டை இசுலாமியர் தம் ஆணை வழி ஒன்றுபடுத்த முயன்றனர். எனினும், தமிழக எல்லையுள் அவர்கள் நினைத்ததை ஆங்கிலேயர் நிறைவேற்றி விட்டார்கள். எனவே, அவர் தம் ஆட்சித் தொடக்கம் முதல் இந்தியா ஒன்றாக, தமிழ் நாட்டு வரலாறு எனத் தனியாகும் நிலை இல்லையாகிவிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டுத் தொடக்க முதல் கம்பெனி ஆட்சி இருந்தது. பிறகு 1858ல் ஆங்கில அரசாங்கமே இந்நாட்டு ஆட்சியை ஏற்று ஆள, அதன் ஆட்சியும் தொடர்ந்து 1947 வரை நடைபெற்றது. 1947ல் இந்தியா விடுதலை அடைந்தது. எனவே, அத்துடன் தமிழ்நாடும் விடுதலை அடைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/360&oldid=1358918" இலிருந்து மீள்விக்கப்பட்டது