பக்கம்:தமிழக வரலாறு.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைக்கு முன்னும் பின்னும்

359


எனலாம். ஆங்கில ஆட்சியின் கீழும் விடுதலை அடைந்த பின்னும் தமிழ் நாட்டு அரசாங்கம்-சென்னை அரசாங்கம்-தில்லியின் ஆணைக்கு உட்பட்டே தொழில் பட வேண்டிய நிலையும் ஏற்பட்டது. எனவே தில்லியில் உண்டாகும் மாறுதல்கள் அனைத்தும் தமிழ்நாட்டையும் பாதித்தன எனலாம். 1947ல் இந்தியா விடுதலையாகு முன்பு எத்தனையோ போராட்டங்களும் புரட்சிகளும் இந்தியா நடத்த வேண்டி இருந்தது. அனைத்திலும் தமிழ் நாடு முன்னின்று பணியாற்றி விடுதலைக்கு ஒல்லும் வகையெல்லாம் உதவிற்று எனலாம்.

எதிர்ப்புச் சக்தி:

ஆங்கிலேயர் ஆட்சித் தொடக்கத்திலேயே தமிழ்நாடு வீறு பெற்று எளிதில் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று தமிழ்நாட்டில் சிறக்கப் பேசப்பெறும் கட்டபொம்மன், மருதுசகோதரர்கள் பூலித்தேவன் போன்ற வீரர்கள் பலரும் இவர்களுக்கு உடன் துணையாய் நின்றவரும் அக்காலத்தில் ஆங்கில ஆட்சியை நாட்டில் தலை எடுக்க ஒட்டாமல் செய்தவர்களே. வானம் பொழியுது, வையம் விளையுது, வெள்ளையனுக்கு ஏதுக்கு வரி? என்று பாளையக்காரர் கூறி, கடைசி மூச்சு இருக்கும் வரை தம் கொள்கையை விடாது போற்றி வாழ்ந்து வீழ்ந்த வீரராகலே திகழ்ந்தார் என்பது இன்று நாடறிந்த கதையாகிவிட்டது. அக்காலத்தில் பாளையக்காரர்களும் பிற மறவர்களும் ஆங்கில ஆதிக்கத்தைத் தமிழ்மண்ணில் வேரூன்றச் செய்யா வகையில் செயலாற்றிச் சிறந்தவர்களே. சிறந்த தமிழ் வேந்தர்கள் ஒருவரும் இலரேனும், தெலுங்கு நாட்டிலிருந்து வந்து இங்கே அரசாண்ட விசயநகர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/361&oldid=1358925" இலிருந்து மீள்விக்கப்பட்டது