பக்கம்:தமிழக வரலாறு.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

366

தமிழக வரலாறு


தமிழ்நாட்டில் புதுச்சேரி, காரைக்கால் என்ற இரு பகுதிகளும் ஆங்கிலேயர் வசம் செல்லாது, அந்தக் காலத்திலேயே பிரெஞ்சுக்காரர் வசத்தில் தங்கிவிட்டன. அந்த இருநாடுகளுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி நேற்றுவரை அவை இரண்டும் பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்டே இருந்தன. அந்த நிலை தமிழ் நாட்டில் ஒரு மாறுதலை உண்டாக்கிற்று எனலாம். தமிழ்நாட்டில் சில தலைவர்களை அடாத நிலையில் ஆங்கில அரசாங்கம் ஒறுக்க நினைத்த வேளைகளிலெல்லாம். அத்தலைவர்கள் கரந்துறையும் நிலை ஏற்பட்டது. அந்த நிலைக்குப் புதுவை சிறந்த இடமாய் அமைந்தது. அங்கு, சுப்பிரமணிய பாரதியார் இருந்து இயற்றிய விடுதலைப் பண்கள் பல. அந்த நாளில் வடக்கே (வங்கம்) இருந்து இந்தப் புதுவைக்கு வந்து தான் அரவிந்தர் இன்று பெரிதாகக் காணும் ஆச்சிரமத்தை அமைத்தார். இப்படித் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகிய புதுவை அரசியல் தலைவருக்குப் புகலிடமாய் அன்று அமைந்தது. இன்றும் பிரெஞ்சுக்காரர் விட்டு நீங்கியும் கூட அந்த இரு பகுதிகளும் பிற தமிழ்ப் பகுதிகளோடு இணைந்து வாழ முடியாமல் தனித்துத் தமக்கென ஒர் ஆட்சியை நிறுவிக்கொண்டு வாழ்கின்றன. அவை இரண்டும் இணையும் நாளே தமிழகம் ஒன்றும் நன்னாளாகும். அதைப்பல தலைவர்கள் இன்றும் வற்புறுத்தி வருகின்றனர்.

வளர்ந்த காங்கிரஸ்:

காந்தி அடிகளின் தொண்டு காங்கிரஸ் வழி ஏழை எளியவர்களுக்குப் பயன்படும் வகையில் சிறக்க அமைந்த காரணத்தால் அதன் கொள்கை ஏழைகளைத் தன் பக்கம் இழுத்தது. பல ஏழைகள் காந்தி அடிகள் சொற்படி நடக்கலாயினர் தமிழ்நாட்டிலும் பலப்பல மக்கள் அத்துறையில் பணியாற்ற முன் வரலாயினர். எனினும், அக்காலத்தில் தமிழ் நாட்டில் எதிர்பாராத மாறுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/368&oldid=1358990" இலிருந்து மீள்விக்கப்பட்டது