பக்கம்:தமிழக வரலாறு.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372

தமிழக வரலாறு


தெற்கு வேறுபாட்டிலும், ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்ற கொள்கையிலும் இரண்டுக்கும் தொடக்கத்தில் வேறுபாடு இல்லை. எனினும், முன்னேற்றக் கழகம் அரசியலில் முதன் முதலாக 1957ல் பங்கு கொண்டு சென்னைச் சட்ட சபையிலும் தில்லிப் பாராளுமன்றத்திலும் இடம் பெற்றது. 1962ல் நடைபெற்ற தேர்தலில் 50 இடங்களைப் பற்றிக் கொண்டு முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாகப் பணியாற்றிக் கொண்டு வருகின்றது. இவ்வாறு தமிழ் நாட்டு அரசியலில் பல்வேறு சூழல்களுக்கு ஏற்பவும் மாறுபாட்டுக்கிடையிலும் நாடு அமைதியாகச் சென்று கொண்டிருக்கிறது. சிற்சில மாறுபட்ட நிலைகள் தோன்றினாலும், பொதுவாகப் பிற நாடுகளையும், இந்தியாவின் பிற பகுதிகளையும் நோக்கத் தமிழ்நாடு அமைதியாகவே வாழ்கிறது. (இன்று திராவிட முன்னேற்றக் கழகமே ஆட்சியில் உள்ளது)[1]

சமூகமும் கலை இயக்கமும்:

அரசியல் நிலைபோக, சமூக இலக்கியக் கலை வளர்ச்சியில் இன்றைய தமிழ்நாட்டைக் கண்டு முடிப்போம். சமூகநெறியில் நாடு பலவகையில் முன்னேற்றம் கண்டுள்ளது எனலாம். ஆங்கிலக் கல்வி நாட்டுச் சமுதாய வாழ்வில் பெரு மாறுதல்களைச் செய்துவிட்டது என்று கண்டோம். சாதி சமய வேறுபாடுகளால் நடக்கும் பல்வேறு மாறாட்டங்களை அழிக்க ஒருவாறு ஆங்கில அரசாங்கம் உதவியது. இன்னும் சாதிப் பெயர்கள் அரசாங்க எழுத்துக்களிலிருந்து அடியோடு நீங்கவில்லை என்றாலும், சாதிகள் இல்லையாகும் வழிக்கு நாடு முன்னேறிச் செல்லும் குறிகள் காண்கின்றன. உரிமைப் பாடலைப் பாடிய சுப்பிரமணிய பாரதியும், பிற இக்காலக் கவிஞர்களும் இச்சாதிப் பூசலால் விளையும் பல்வேறு கொடுமைகளை விளக்கி எழுதியுள்ளனர் -


  1. மூன்றாம் பதிப்பு (1971 இல்) வெளிவந்த ஆண்டு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/374&oldid=1359087" இலிருந்து மீள்விக்கப்பட்டது