பக்கம்:தமிழக வரலாறு.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைக்கு முன்னும் பின்னும்

377


தாசன் என்ற கனக சுப்புரத்தினமும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையும், தேசிக விநாயகம் பிள்ளையும் முக்கியமானவர்கள். அவர்களுடைய பாடல்கள் இன்றும் நாட்டில் நன்கு பழக்கத்தில் உள்ளன அவர்களை யன்றிப் பலர் பலவகையில் பாட்டிசைக்கின்றார்கள். எனினும் அவை வளரவில்லை எனலாம். விடுதலைப் பெற்ற அரசாங்கம் குழந்தைக் கவிகளை ஊக்குவித்துப் பரிசளிக்கின்றது. இளங்குழந்தைகளின் உள்ளங்களைத்தொடும் வகையில் எளிய பாடல்கள் பாடும் புலவர்களுக்கு அரசாங்கம் பரிசளிக்கின்றது. எனவே, அத்தகைய குழந்தைப் பாடல்களும் வளர்ந்து கொண்டே வருகின்றன. அரசாங்கம் நூல் நிலைய இயக்கத்தை நன்கு வளர்க்கிறது.

உடைநடையும் விடுதலைக்கு முன்னும் பின்னும் விரைந்து வளர்ந்துள்ளது எனலாம். மறைமலை அடிகள், திரு வி. கலியாணசுந்தரனார் போன்ற பெரியவர்கள் பல உரைநடை நூல்களை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இன்று பல அறிஞர்கள் பலப்பல உரைநடை நூல்களை எழுதி இலக்கியத்தை வளர்த்து வருகிறார்கள். இன்று நாட்டில் எழுத்தாளர் பல்கிப் பெருகியுள்ளார்கள். பத்திரிகைகளும் பலவாக வளர்ந்துள்ளன. இந்திய அரசாங்கமும் சிறந்த நூல்களுக்கு ஐயாயிரரூபாய் வரை பரிசுகள் வழங்குகின்றது. சென்னை அரசாங்கமும் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் மூலமாக ஆண்டுதோறும் சிறந்தநூல்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை பரிசுகள் வழங்குகிறது. மற்றும் தனிப்பட்ட பல நிலையங்களும் தமிழ் இலக்கிய நூல்களைக் குறைந்த விலைக்கு வழங்குகின்றன. இவ்வாறு தமிழ் இலக்கியம் வளரும் நிலை இன்று இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/379&oldid=1359104" இலிருந்து மீள்விக்கப்பட்டது