பக்கம்:தமிழக வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தமிழக வரலாறு


இலக்கியங்கள் அவ்வக்காலத்துத் தமிழ் நாட்டையும் அதில் வாழ்ந்த புலவர், புரவலர்களையும், மக்கள் வாழ்க்கை முறைகளையும் காட்டுகின்றன எனலாம். பிற்காலத்தில் தோன்றிய சில இலக்கியங்கள் வெறுங்கற்பனைகளிலேயே மிதக்கின்றன என்பது உண்மையாயினும், பெரும்பான்மைத் தமிழ் இலக்கியங்கள் தமிழக வரலாற்றுக்கு உதவி செய்கின்றன என்பதும் உண்மை. அவற்றின் நிலைகளையெல்லாம் மேலே ஆங்காங்கே காணலாம்.

கல்வெட்டுக்கள்

இலக்கியங்களை அடுத்துத் தமிழக வரலாற்றுக்குப் பெருந்துணை புரிவன கல்வெட்டுக்களேயாகும். பிற்காலப் பல்லவர் காலத்திலும் பிற்காலச் சோழர் பாண்டியர் காலங்களிலும் தமிழ்நாட்டில் எத்தனையோ ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்கள் செதுக்கப் பெற்றன. கற்கோயில்களைக் கட்டத்தொடங்கிய அந்த ஏழாம் நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்து பதினான்கு பதினைந்தாம் நூற்றாண்டுகள் வரை, தமிழ் நாட்டிலும்–ஏன்–தென்னிந்தியா முழுவதிலுமே பலப்பல கல்வெட்டுக்கள் உருவாயின. இந்திய அரசாங்கத்தார் இக்கல்வெட்டுக்களைக் கண்டெடுத்து ஆராய்ந்து, அச்சிட்டு வெளியிடுவதற்காகவே ஒரு பகுதியை ஏற்படுத்தியிருந்தனர். பத்தாண்டுகளுக்கு முன் வரை அவ்வழியில் அதிகம் கருத்திருத்தி அத்துறையினர் பல கல் வெட்டுக்களை வெளிக்கொணர்ந்தனர். அவற்றால் இடைக்காலத் தமிழக வரலாறு எத்தனையோ வகையில் புத்தம் புதிய நல்ல ஒளியோடு உலகுக்குத் தெரியலாயிற்று. ஆயினும் இப்போது அப்பணி தொடர்ந்து செம்மையாக நடைபெறவில்லை எனலாம். அத்துறை சீராக்கப்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/38&oldid=1357065" இலிருந்து மீள்விக்கப்பட்டது