பக்கம்:தமிழக வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்று மூலங்கள்

37


ஒழுங்காகக் கல்வெட்டுக்களை ஆராய முற்படின், தமிழ் நாட்டு வரலாறு இன்னும் நன்கு விளக்கமுறும். தமிழ் நாட்டு அரசாங்கத்தார் அத்துறையில் ஆவன செய்ய வேண்டும்.

கல்வெட்டு என்பது என்ன? கல்லிலே வெட்டப்படுவதே கல்வெட்டு. இடைக்காலத்தில் வானோங்கிய கோபுரங்களைக் கொண்ட பெருங்கோயில்களைக் கட்டினார்கள் தமிழர்கள்; கோயில்களை நாட்டின் செல்வமாகப் போற்றினார்கள் இந்திய நாட்டிலேயே, தமிழ் நாட்டைப் போன்று பெருங்கோயில்களைக் கொண்ட பகுதிகளைக் காண இயலுமா? ஒரு குன்றும் காணக் கிடைக்காத தஞ்சை நாட்டில் மலையென மருளும் உயர்ந்த கோபுரங்கள் கொண்ட பல பெருங்கோயில்களை இடைக்காலத் தமிழர்கள் கட்டி வைத்தார்கள். அக் கோயில்கள் நாட்டு வரலாற்றையும், பண்பாட்டையும் கலையையும், பிற நல்ல செல்வங்களையும் வளர்த்தன எனலாம் அப்பெருங்கோயில்களின் மதிற்சுவர்களிலேதான் பல கல்வெட்டுக்கள் உருவாயின. சில குகைகளிலும் குன்றுகளிலும் உள்ளனவாயினும், பல கோயில் மதிற்சுவர்க் கல்வெட்டுக்களே. இக்காலத்தில் கோயில்களைப் பழுது பார்க்க வரும் ‘புண்ணியவான்கள்’ இக் கல்வெட்டுக்களின் அருமை தெரியாமல் இவற்றை அப்புறப்படுத்தி உயர்ந்த சலவைக் கற்களைப் புதைத்து விடுகின்றார்கள் இந்திய அரசாங்கத்தார் அத்தகைய அப்புறப்படுத்தும் நிலை நேராதவாறு ஒரு வகையில் பார்த்துக்கொள்ளுகின்றனர் என்றாலும், முழுதும் தடுத்து நிறுத்தப்படவில்லை என்பர் சிலர்.

இக்கல்வெட்டுக்கள் எப்படி உண்டாயின? ஏன் உண்டாயின? இவற்றில் எழுதியிருப்பன யாவை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/39&oldid=1357074" இலிருந்து மீள்விக்கப்பட்டது