பக்கம்:தமிழக வரலாறு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தமிழக வரலாறு


அவை எவ்வாறு வரலாற்றுக்கு உதவுகின்றன? கல்வெட்டுக்களையெல்லாம் அரசர்களே எழுதினார்கள் என்று முடிவு சொல்ல முடியாது. சாதாரண மனிதரது கொடையைக் காட்டும் கல்வெட்டுக்களே பல. ஓர் ஊரில் ஒருவன் கோயிலுக்கு விளக்கெரிப்பதற்காக ஒரு நிலத்தை மானியமாக விட நினைத்தால், அதை அக்கோயிலில் கல்வெட்டிலேயே பொறிப்பது வழக்கம். அப்படிப் பொறிக்கும் போது எந்த ஆண்டை அவன் குறிக்க முடியும்? இப்போது நாம் ஆவணங்களைப் பதியும் போது ஆங்கில ஆண்டைக் குறிக்கின்றோம். ஆனால் அன்றைய தமிழன் அவ்வாறு செய்யவில்லை. அக்காலத்தில் நாடாண்ட மன்னவன் ஆட்சி ஏற்றுக் கழிந்த ஆண்டுகளைக் கணக்கிட்டு, இன்ன மன்னனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டில் இன்னார் செய்த ‘தானம்’ என்று குறிக்கின்றான். அப்படித் தன் அரசனைக் குறிக்கும் போது, அவ்வரசனது வீரச் செயல்கள், மாற்றார் நாட்டின்மேல் படையெடுப்பு, வெற்றி விழா, வேறு நல்ல சிறப்பியல்புகள், பண்பாடுகள் அனைத்தையும் முன் குறிப்பான். அவ்வாறு குறித்து, இத்துணைச் சிறந்த இம்மன்னனது இத்தனையாவது ஆட்சியாண்டு என்று தன் கல்வெட்டுக்குக் கால எல்லை கட்டுவான். அந்தக் கால எல்லையே தமிழ் நாட்டு வரலாற்றுக்குப் பெரிதும் பயன்பட்டது. ஒவ்வோர் அரசர் தம் திருவும் செயலும், அவற்றின் வழி நாட்டு மாறுதல்களும், மக்கள் வாழ்வும் நன்கு புலப்படுகின்றன. ஆதலால், அக்கல்வெட்டுக்கள் அக்காலத் தமிழக வரலாற்றை நன்கு காட்டுகின்றன எனலாம். ஏறக்குறைய ஏழெட்டு நூற்றாண்டுகளின் தமிழக வரலாறு இக்கல் வெட்டுக்களினிடையிலே தான் அமைந்து கிடக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/40&oldid=1357080" இலிருந்து மீள்விக்கப்பட்டது