பக்கம்:தமிழக வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்று மூலங்கள்

39


சிறப்பாக இடைக்காலத் தமிழகத்தின் வரலாற்றுக்கு இக்கல்வெட்டுக்களே சிறந்த காரணமாக அமைகின்றன எனலாம். அவற்றின் விரிவையெல்லாம் அவ்வக்கால வரலாற்றினிடையே வைத்துக் காணலாம்.

நாணயங்களும் புதைபொருள்களும் :

கல்வெட்டுக்களைப் போன்று அத்துணைப் பேரளவில் உதவி செய்யாவிட்டாலும், நாணயங்களும் புதை பொருள்களும் தமிழ் நாட்டு வரலாற்றுக்குப் பெரிதும் உதவுகின்றன எனலாம். சிறப்பாகப் பண்டைத் தமிழ் நாட்டுடன் பிற நாட்டார் கொண்டிருந்த தொடர்புகளைக் காட்ட அவை பெரிதும் பயன்படுகின்றன எனலாம். தமிழ் நாட்டு மண்ணில் புதைந்து கிடந்து, பின் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் சில உரோம, கிரேக்க நாட்டு நாணயங்களாய் இருக்கின்றமையின், அந்தக் காலத்தில் தமிழகம் மேலை நாடுகளோடு எத்துணைத் தொடர்புடையதாய் இருந்ததென்பது நன்கு தெரிகின்றது. நாணயங்களில் பொறிக்கப்பட்ட முத்திரைகள் உருவங்கள், ஆகியவற்றைக் கொண்டும், பிற எழுத்துக்கள் முதலியவற்றைக் கொண்டும், அவற்றின் காலத்தையும் அக்காலத்தின் நாட்டு நிலையையும் அறிந்து கொள்ளலாமன்றோ? சிறப்பாக வெளிநாட்டு வாணிபத் தொடர்பும் அரசியல் தொடர்பும் அறிந்துகொள்ள அவை பெரிதும் பயன்படுகின்றன. மேலும், உலோகங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ளக் கற்றுக்கொண்டதோடு, அந்த நாளில் அவற்றைச் செல்வமாக்கவும் நாணயங்களாக்கவும் கற்றிருந்தார்கள் என்பதை அறியும் போது நம்மை அறியாமலே வரலாற்று நிலையில் நாம் நெடுந்தூரம் சென்றுவிடுகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/41&oldid=1357090" இலிருந்து மீள்விக்கப்பட்டது