பக்கம்:தமிழக வரலாறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தமிழக வரலாறு


நாணயங்களேயன்றி, வேறு சில புதை பொருள்களும் வரலாற்றுக்கு உதவுகின்றன. அவற்றுள் சிறந்தன புதையுண்ட பெருநகரங்களாகக் கண்டெடுக்கப்பட்ட சிந்து வெளியிலுள்ள மொகஞ்சதாரோ, ஆரப்பா போன்றவைகளேயாம். இயற்கையன்னையின் கால வேகத்தில் எத்துணையோ நில மாறுதல்கள் நடைபெறுகின்றன; இடம் பெயர்கின்றன; இல்லையாய் அழிகின்றன; புதியனவாகவும் தோன்றுகின்றன. என்றோ அழிந்த பெருங்காடுகளின் மரங்களே இன்று நிலக்கரியாய் உருப்பெற்றுள்ளன என்கின்றனர். வரலாற்று ஆசிரியர் தாம் கண்ட ஆழ்ந்த பொருள்களைத் தோண்டி எடுத்துத் தமக்கெனப் பயன்படுத்த விழையார்; ஆனால் அவற்றை என்றென்றும் அழியாமல் பாதுகாத்து, வரலாற்றை எக்காலத்தும் நிலை நாட்ட முயல்வர். வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகத்தைக் காட்ட அந்தச் சிந்து வெளி நாகரிகம் எத்துணை உதவி செய்த தென்பதனை உலகம் நன்கு அறியும். அங்குள்ள நாகரிகம் ஆரியருக்கு முற்பட்ட நாகரிகம் எனவும், அது தென்னாட்டுடன் தொடர்பு கொண்ட திராவிட நாகரிகத்தின் கூறுபாடே எனவும் வரலாற்று அறிஞர் தெள்ளத் தெளியக் காட்டுகின்றனர் அந்நகரங்கள் தமிழகத்தின் பெருமையை ஓரளவு உயர்த்திவிட்டன என்பது மிகையாகாது. இது போன்றே கடலால் அழிந்த காவிரிப்பூம்பட்டினமும் பிறவும் ஒரு காலத்தில் அகழ்ந்தெடுக்கப்படின் தமிழ் நாட்டு வரலாறு இன்னும் நன்கு விளக்கமுறும் என்பது உறுதி.

இவ்வாறாகிய பெருநகரங்களேயன்றி, வேறு சில புதையுண்ட பொருள்களும் வரலாற்றுக்குத் துணை செய்கின்றன. இறந்த மக்களைப் புதைத்து வைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/42&oldid=1357180" இலிருந்து மீள்விக்கப்பட்டது