பக்கம்:தமிழக வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தமிழக வரலாறு


புலனாகின்றன தமிழ்நாட்டுச் சமயம் வளர்ந்த வரலாற்றை ஆங்காங்குள்ள சிலைகளும், ஊர் தொறும் உள்ள கோயில்களும் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருப்பதை அறியாதார் யார்! ஒவ்வோர் அரச பரம்பரையின் உணர்வையும், ஆழ்ந்த கலை ஆர்வத்தையும், அவர் தம் கலையையும் கட்டடங்களின் நிலையையும் கொண்டு அறிய முடிகின்றதன்றோ! எனவே, இவை வரலாற்றினுக்கு உறுதுணையாக அமைவதில் வியப்பில்லையன்றோ!

வெளிநாட்டார் எழுதி வைத்த குறிப்புக்கள்

வரலாற்றுக்கு உள்நாட்டுப் பொருள்களோடு, வெளி நாட்டு நாணயங்களும் பிறவும் உதவுகின்றன என்பதை மேலே கண்டோம். அவற்றிலும் மேலாக, வெளிநாட்டார் நம் நாட்டினைப் பற்றி எழுதி வைத்த குறிப்புக்கள் தமிழக வரலாற்றுக்குப் பெரிதும் துணையாகின்றன. இது போன்ற வரலாற்றுக் குறிப்புக்கள் எல்லா நாடுகளுக்கும் உள்ளன என்று கூற இயலாது. நம் நாடு காலத்தால் மிக்க பழமை எய்திய காரணத்தால், அந்நாள் தொட்டு இந்நாள் வரை வாணிபத்துறை, சமயத்துறை, அரசியல் துறை, கலைத்துறை ஆகியவற்றின் வகைகளில் பிற நாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு வந்து சென்ற பலர் தத்தம் குறிப்புக்களில் இந்நாட்டைப் பற்றியும் நாட்டு மக்களைப் பற்றியும் அவர் தம் வாழ்க்கை வரலாறு பற்றியும் குறித்துச் சென்றுள்ளார்கள். சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுப் பகுதித் தலைவராயிருந்த திரு நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் தம் குறிப்புக்களையெல்லாம் தொகுத்து, ‘தென்னாடு பற்றி வெளிநாட்டவர்’ என்னும் நூலைப் பல்கலைக் கழக வெளியீடாக வெளியிட்டுள்ளார்.


1. Foreign Notices of South India

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/44&oldid=1357200" இலிருந்து மீள்விக்கப்பட்டது