பக்கம்:தமிழக வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிலநூலும் வரலாறும்

47


நிலைத்த இடம் பெற்றன அல்லவோ! மெசபட்டோமிய நாகரிகமும், நைல் நதி நாகரிகமும், சீன நாகரிகமும், பிற பழம்பெருநாகரிகங்களும் ஆற்றங்கரைகளை அடிப் படையாகக் கொண்டவைதாமே! எனவே நிலப்பகுப்பாகிய ஆறு, நாகரிகத்தை வளர்த்தது. இந்த ஆற்றங்கரை நாகரிகத்தை அழித்தனவும் ஆறுகளேதாம். காவிரிப்பூம்பட்டினமும், மொகஞ்சதாரோ, ஆரப்பா முதலியனவும் அவ்வவ்வாற்றுக் கடல் வெள்ளப் பெருக்கால் அழிவுற்றன அல்லவோ! ஆகவே, வரலாற்றை ஆக்கவும் அழிக்கவும் வல்ல திறன் ஆற்று வெள்ளத்திற்கு அமைந்த ஒரு பெருஞ்சிறப்பாகும்.

இப்பரந்த நில உலகில் மனிதன் எங்குத் தோன்றினான் என்பதில் மக்கள் ஆராய்ச்சி முற்றுப்பெறவில்லை எனலாம். அவர்தம் கொள்கைகளில் ஒன்று–ஏன்?–சிறந்தது–மக்கள் பிறப்பிடம், மறைந்த லெமூரியாக் கண்டம் என்பதாகும். அந்த லெமூரியாக் கண்டமே தமிழ் இலக்கியங்கள் காட்டும் ‘இழந்த குமரிக்கண்ட’மாகும். எனவே மக்கள் தோற்றத்தின் முதலிடம் தமிழகம்–மறைந்த தமிழகம்–என்பது பொருத்தமாகும்.

லெமூரியாக் கண்டம் அழிவுற்ற காலை அழிந்தனவும் தோன்றியனவும் அளப்பில. குமரிக்கோடு கொடுங்கடலால் கொள்ளப்பட்டது. அதே வேளையில் ஆழ் கடல் அடியில் இருந்த இமயம் உலகத்தின் உயர்ந்த சிகரமாய் மேலோங்கியது. இப்படி எத்தனை எத்தனையோ மாறுதல்களுக்கு இடையில் நாம் இவ்வுலகில் வாழ்ந்து வருகின்றோம். நம் வரலாறும் வளர்ந்து கொண்டே வருகின்றது. அவ்வரலாற்று வளர்ச்சியை எல்லாம் ஆராய்ந்துகொண்டே செல்லின், நாம் எடுத்த பொருளைக் காண இயலாது. எனவே, இந்த அளவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/49&oldid=1357241" இலிருந்து மீள்விக்கப்பட்டது