பக்கம்:தமிழக வரலாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாட்டு வரலாறு

57


இன்றைய மத்தியக் கிழக்கு நாடுகளைக் கட்டி ஆண்ட டோரியரியஸ்,[1] காலத்தில் யவனரும் பிறரும் தென்னிந்தியருடனும் சீனருடனும் பெரு வாணிபத் தொடர்பைக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகின்றது. தமிழ் இலக்கியத்தில் வரும் யவனர்கள் பெரும்பாலும் இம்மேலை நாட்டுக் கிரேக்க ரோம நாட்டு மக்களே என்று கூறுவர் கனகசபை பிள்ளை அவர்கள். இவ்வாறு வடவிந்தியா பிற நாடுகளுடன் தொடர்பறியாத நெடுங்காலத்துக்கு முன்பே, தென்னிந்தியா, சிறப்பாகத் தமிழகம் –பிற நாடுகளுடன், மேற்கே எகிப்து நாடு தொடங்கிக் கிழக்கே சீன நாடு வரை, வாணிபத் துறையிலும் அரசியல் துறையிலும் தொடர்பு கொண்டிருந்தது. இத்துணைப் பழம் பெருமை வாய்ந்த தமிழகத்தின் வரலாறு இன்று வரை திட்டமாக வரையறுக்கப் பெறவில்லை இனியாயினும் தொடர்ந்த வகையில் வரலாறு வெளிவரத் தமிழ்நாட்டு அரசியலார் முயல வேண்டும்.

வரலாற்றுப் பகுதிகள் :

இந்தத் தமிழ் நாட்டு வரலாற்றைப் பலப்பல பகுதிகளாகப் பிரித்து ஆராயலாம். கற்காலத்துக்கு முற்பட்ட அந்தப் பனிபடு பெருங்காலம் தொடங்கி இன்றைய இருபதாம் நூற்றாண்டு வரை உள்ள வரலாற்றினைத் தொடர்புபடுத்தி எழுத வேண்டுவது வரலாற்றுத் துறையில் ஊக்கமுடைய நல்லவர் கடமையாகும். இந்த நெடுங் காலத்தில் தமிழகம் நிலப்பரப்பிலும், பண்பாட்டிலும் வாழ்க்கை முறையிலும், நாகரிக வளர்ச்சியிலும் பிற துறைகளிலும் எத்தனை எத்தனையோ மாறுபாடுகளைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டு மக்களில் பழங்குடி மக்கள் யார்? குடியேறியவர்கள் யார்? என்று பகுத்து


  1. Darius in 6th Century B. C.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/59&oldid=1357305" இலிருந்து மீள்விக்கப்பட்டது