பக்கம்:தமிழக வரலாறு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்

79

பாற்றிக்கொள்ள இயல்பாகக் கிடைத்த கூரிய கற்களையே ஆயுதமாகக் கொண்டான். அந்தக் காலமே கற்கால மாக்கப்பட்டது. பிறகு மனிதன் சற்று முன்னேற்றமடைந்த காலத்திலேதான் இரும்பையும் செம்பையும் உபயோகிக்க கற்றுக் கொண்டான். தனித்து வாழ்ந்த மனிதன் இந்தக் காலத்தில் மற்றவர் துணையோடுதான் வாழ்ந்திருக்க வேண்டும். காணும் கல்லை எடுத்துத் தனியாகத் தீட்டி ஆயுதமாக உபயோகிக்க வேற்றவர் உதவி தேவை இல்லை. எனினும், இரும்பையோ செம்பையோ வடித்துக் கூரிய ஆயுதமாக்க வேண்டுமானால், அவன் மற்றவர் உதவியை நாடாது எப்படிச் செயலாற்ற முடிந்திருக்கும்? எனவே, கற்காலத்தில் வாழ்ந்த மனிதனைக் காட்டிலும் இரும்பு, செம்புக்காலங்களில் வாழ்ந்த மனிதன் மற்றவரோடு கூடி வாழக் கற்றுக் கொண்டவனாகத் தான் இருக்க வேண்டும். விலங்கெனத் தனித்து வாழ்ந்த வாழ்வை விடுத்து, மனிதன் கூடி வாழக் கற்றுக்கொண்ட அந்தச் செம்பு, இரும்புக் காலங்கள் மனித வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுவிட்டன.

முதல் கற்காலம் மனிதன் தனியாகத் தனக்கு உணவு தேடிய காலமே எனலாம். அதை அடுத்து ஒன்றன் பின் ஒன்றாகப் பல்வேறு காலங்கள் தோன்றி, அவன் வாழ்வைக் காட்டு வாழ்விலிருந்து நாட்டு வாழ்வாக்கும் முயற்சியில் அவனைச் செலுத்தின என்பது பொருந்தும். நாள், ஆண்டு, நூற்றாண்டு, ஆயிரமாயிரமாண்டுகள் என்ற எல்லையில் அவனையும் அவன் பரம்பரையையும் காலமானது பற்றி ஈர்த்துக் கொண்டே வந்துவிட்டது. அதன் இடையில் அவன் புதுப்புது உபயோகப் பொருள்களைக் கண்டான். அவற்றுள் ஒன்று நெருப்பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/81&oldid=1375637" இலிருந்து மீள்விக்கப்பட்டது