பக்கம்:தமிழக வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

தமிழக வரலாறு


Calendar) தொடங்கினார்கள் என்பர் ஆய்வாளர். இந்த அமைப்புக்களையும் கால எல்லைகளையும் ஐம்பது ஆண்டுக் காலத்தின் இயற்கை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஆராய்ந்து கண்டே அத்தகைய ஆராய்வின் முடிவாகத் திட்டமாக வரையறுத்தார்கள் என்று கொள்ளுதல் மிகப் பொருந்துவதாகும்.

பிரிவுகளும் பிளவுகளும் :

இவ்வாறு அமைந்த மனித சமுதாயம் இன்னும் பல வகையில் தன் வாழ்வுக்கேற்றபடி மாறுதல்களை அமைத்துக் கொண்டது. தலைவர்கள் தோன்றினார்கள். கூட்டு வாழ்க்கையும் இன உணர்வும் தோன்றியதும் அவற்றை நடத்திச் செல்லத் தலைவன் தேவையானான். இவ்வாறு தலைவனும், பின் அவனுக்கு வேண்டிய பிறரும் தோன்றலாயினர். உயர்வு தாழ்வு மனப்பான்மை தோன்றலாயிற்று. ஒரு சிலர் ஆளவும் ஒரு சிலர் தாழ்ந்து அடிமையாகவும் வேண்டிய நிலையும் உண்டாயிற்று. கூட்டுச் சமுதாய வாழ்வில், வாழ்க்கை நலத்தின் பொருட்டுப் பணியாற்ற ஏற்படுத்தப்பட்ட வேறுபாடுகள் பிறகு மனித இனத்திலேயே ஏற்றத் தாழ்வைக் கற்பித்துவிட்டன விலங்கினும் வேறுபட்ட மனிதன், அதனோடு பலப்பல ஆயிரமாண்டுகள் போராடி வெற்றி கண்டான். எனினும், அந்த வேற்றுமை மனப்பான்மையும் போர் உணர்ச்சியும் காலப் போக்கில் வேறு வகையில் திரும்பின; ஒரு மனிதன் மற்றவனை வெல்வதிலும், ஓர் இனம் வேறு இனத்தின் மேல் படையெடுத்து வெற்றி காண்பதிலும் திரும்பின. இதனால் போர் முறை தெரிய அதற்கேற்ற படைகளும் தோற்றுவிக்கப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/88&oldid=1357493" இலிருந்து மீள்விக்கப்பட்டது