பக்கம்:தமிழக வரலாறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்

93


கின்றார். இப்படி வரலாற்றுத்கு முற்பட்ட தமிழகமும் அதில் தோன்றி வளர்ந்த திராவிட நாகரிகமும் உலகில் சிறந்து வாழ்ந்தன என்பது தேற்றம்.

சிந்துவெளி நாகரிகம் தோண்டிக் கண்ட பிறகே ஆராய்ச்சியாளர் வடக்கையும் தெற்கையும் பிணைத்துப் பார்க்கும் நோக்கினை மேற்கொண்டனர். அதில் ஓரளவு அந்தச் சிந்துவெளி நாகரிகம் தென் தமிழ் நாட்டு நாகரிகத்தை ஒத்ததுதான் என்பதை உணர்ந்தாரேனும் மேலும் தமிழக வரலாற்றையும், அதன் நாகரிகம் பாகுபாடு ஆகியவற்றையும் எண்ணி உணர்ந்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்யாது விட்டு விட்டார்கள் எனலாம். டாக்டர் சென் என்பவர் உலகிலேயே முதல் முதல் நெல் பயிரிட்ட மக்கள் திராவிட மக்கள்தாம் என அறுதியிட்டு[1] கூறுகின்றார். அது போன்றே பருத்தியைப் பயிரிட்டு ஆடை நெய்வதிலும், மீன் பிடிப்பதிலும், பிற வாணிபங்களிலும் அக்காலத்திலேயே தமிழர் சிறந்திருந்தனர் என்று அவரே காட்டுகின்றார். இவ்வாறு சிற்கில வரலாற்று ஆசிரியர்கள் இன்று தென்னாட்டைப் பற்றி—சிறப்பாகத் தமிழகத்தைப் பற்றி ஆராய்கிறார்கள். தமிழகம் தன் வரலாற்றுக் காலததுக்கு நெடுநாளுக்கு முன்னரே சிறந்த நாடாகப் பல்வேறு நல்ல பண்புகளும் நாகரிகச் சூழ்நிலையும் பெற்று விளங்கியதென்பதும், அவற்றைத் திட்டமாக வரையறுக்க இயலாதென்பதும் உலக வரலாற்றின் ஒப்புமைக் கண்கொண்டு காணின் அவற்றின் உண்மைகளை ஒருவாறு அறிய வழியும் வாய்ப்பும் உண்டென்பதும் அறியலாகும். இனி, இவ்வரலாற்றிக்கு முற்பட்ட காலத்தில் வடநாடும் தென்னாடும் எவ்வாறு கலந்து வாழ்ந்தன என்பதையும், தமிழகம் வட விந்தியாவோடு கொண்ட தொடர்பு எத்தகையது என்பதையும் காணலாம்.


  1. Th9 Pageant of Indian History—Dr. Sen, p. 20.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/95&oldid=1357567" இலிருந்து மீள்விக்கப்பட்டது