பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. கோசரும், நன்னனும்
மாங்கனி தின்ற மங்கையும்

பாழி நகர் நன்னன் கொடியவன் தனக்கு ஊறுநேர்ந்த போது ‘அஞ்சேல்’ என ஆறுதல் கூறி வந்து, தனக்காகப் போரிட்டு உயிர் துறந்த ஆஅய் எயினனின் குலமகளிர் துயர் துடைக்கும் இரக்கம் அற்ற அரக்கன். அவ் வேள் மகளிர் துயரைத் துடைத்த அகுதையை அழிக்க முனைந்த அறக் கொடியோன்.

அவன் கொடுமை அந்த அளவோடு நின்றுவிடவில்லை; அவன் கொடுமைக்கெல்லாம் மகுடம் சூட்டினாற் போலும் ஒரு கொடுஞ்செயல் தன் காவல் மரமாக அவன் மாமரத்தை வளர்த்து வைத்திருந்தான். அம்மாமரத்தை ஒட்டி ஓடிக்கொண்டிருந்தது ஒரு நீரோடை. ஓடையில், அவ்வூர் மகளிர் சென்று நீராடுவது வழக்கம். ஒரு நாள் அம் மகளிர் நீராடிக் கொண்டிருக்கும் போது அம் மாமரத்துக்காய் ஒன்று காம்பற்று ஓடையில் வீழ்ந்து அடித்துக் கொண்டு வந்தது. அதைக் கண்ணுற்ற மகளிரில் ஒருத்தி அதைக் கைப்பற்றி தின்றுவிட்டாள்.

அது நன்னனுக்குத் தெரிந்து விட்டது. அவ்வளவே அவளைக் கைது செய்து கொண்டு சென்று கொலைத் தண்டம் கொடுத்து விட்டான். அது அறிந்த அப்பெண்ணின் தந்தை, நன்னன் அவை புகுந்து அவனைப்பணிந்து நின்று ‘அரசே! என்மகள் செய்த குற்றத்திற்குத் தண்டமாக எண்பத்தொரு களிறுகளையும், அவள் எடையளவு பொன்

66