இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
________________
'தமிழன் இதயம்'
கன்றினுக்குத் தாய்போல உயிர்கட் காகக்
கரைந்துருகும் காந்தியைநாம் நேரிற் கண்டோம்
இன்றுலகின் துயர்நீங்கச் சிறந்த மார்க்கம்
எடுத்துரைக்கக் கொடுத்து வைத்தோம் இருந்து கேட்க.
கவிராஜர் கற்பனைக்கும் எட்டாத் தீரம்
கடலென்றாற் குறைவாகும் கருணை வெள்ளம்
புவிராஜர் தலைவணங்கும் புனித வாழ்க்கை
பொறுமையெனும் பெருமைக்குப் போற்றும் தெய்வம்
தவராஜ யோகியர்கள் தேடும் சாந்தி
தளர்வாகும் எழுபத்து ஏழாம் ஆண்டில்
யுவராஜ வாலிபர்க்கும் இல்லா ஊக்கம்
ஒப்பரிய காந்தியரால் உலகம் வாழ்க!