பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

'விருந்தெதிர் கோடலும் இழந்த வென்னை' என்று கண்ணகி இழந்த பலவின்பங்களைக் குறியாது இதையே குறிப்பாளாயின் இல்வாழ்வாளின் இனிமையான கடமைகளுள்ளே விருந்தோம்பல் எத்துணைச் சிறப்புற்றது என்பதையறியலாம். விருந்தோம்பலால் விருந்தினர்க் கேயன்றி விட்டோராகிய தலைவன் தலைவியர்க்கும் தனிப்பட்டதோர் அரும்பயனுண்டு. இது தம்முளேதோன்றும் ஊடல் நீங்கிக் கூடுவதற்குத் தக்க வாய்ப்பளிக்கின்ற தன்றோ ஆகையால்தான் ஒல்காப்புகழ்த் தொல்காப்பியனாரும் இதனை ஊடல் தீர்க்கும் வாயில்களுள் ஒன்றாகக் கண்டு வைத்தார். என்னே விருந்தோம்பலின் பெருந்தன்மை.

கலையறிவு: இல்லறக் கடமைகளோடு மகளிர், கலை பல கற்றுமிருந்தனர்; கலையுணர்ச்சி பொருந்தத் தம்மை ஒப்பனை செய்து கொள்வர்; தம் சிறுவர் சிறுமியர்க்குக் கற்பனை நிறைந்த ஒப்பனை செய்து மகிழ்வர்; ஓவியம் தீட்டல், காவியம் புனைதல், ஆடல் பாடல் ஆகிய கலைத் துறைகளிலும் சிறந்து விளங்கினர் எனச் சங்கப்பாடல்கள் சான்றும் பகரும். மாதவியின் ஆடல் பாடல் திறன், கலைத்திறனுக்கோர் மலைச் சிகரம். தினைப்புனங்காத்த கன்னியொருத்தி தன் இன்னிசையால் மதகரியையும் மயக்கியுறங்கச் செய்தாள் என்று அகநானூற்றுப் பாட்டொன்று கூறும். இவ்வருங்கலைகளேயன்றி இற்றைக் காலத்தில் "குடிசைக் கைத் தொழில்கள்” எனப் பெரிதும் பேசப்படும் நூல் நூற்பு, ஒலை வேலை முதலியன நடைபெற்றன என்பதைப் "பருத்திப் பெண்டிர்", "இரும்பனங் குடை" முதலிய சொற்றொடர்கள் விளக்கும். வீட்டுப் பொருள்கள் தோட்டப் பொருள்களான பனை தென்னை முதலியவற்றின் இளங்காய்கள் முதலியவற்றால்