பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

பகைவனைப் பாராட்டும் பண்பு ஒருபெண்பாற் புலவரிடத்துக் காணப்பட்டது. வெண்ணிக்குயத்தியார் எண்ணித் துணிந்து எடுத்துரைத்தார்.

“வென்றோய்! நின்னிலும் நல்ல னன்றே"
• • •
மிகப்புகழு லக மெய்திப்

புறப்புண் நாணி வடக்கிருந்தோனே!"
- புறம். 66

அவ்வம்மையினது அறிவும், ஆற்றலும், அஞ்சாமையும், நடுவு நிலைமையுந்தான் என்னே! இத்தகைய கல்வித் திறனேயன்றிப் பொது அறிவும் இயற்கையிலே பெற்று விளங்கினர் தமிழக மகளிர். பொற் கிண்ணத்துத் தேன் கலந்த பாற்சோற்றை உண்ண மறுத்துச் செவிலித்தாய்க்கு ஒட்டங்காட்டிய மேற்குறிக்கப் பெற்ற செல்வப் பெண்ணுங்கூடத் திருமணத்திற்குப் பிறகு எக்காரணத்தாலோ கணவனது பொருள் வளம் சுருங்கிவிடத் தந்தை கொடுத்தனுப்பிய கொழுஞ் சோற்றுணவையுங் கொள்ள விரும்பாது தற்கொண்டான் வளத்திற் கேற்ப நாளில் ஒரு வேளை உணவே உண்ணும் நிலையைக் கண்ட செவிலித்தாய் அவளது அறிவை வியந்து பாடியதாகக் காட்டும் அந் நற்றிணைப்பாட்டு நயத்தற்குரியது:

".................பந்தரோடி
ஏவல் மறுக்கும் சிறுவிளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள்கொல்
கொண்ட கொழுநன் குடிவறனுற் றென்று
கொடுத்த தந்தை கொழுஞ் சோறுள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்

பொழுது மறுத்துண்ணும் சிறுமதி கையளே
- நற். 110