பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

திகழ்வதற்கு ஏதுவான இந்நிகழ்ச்சியை மணம் என்று பெயரிட்டமை ஏற்புடைத்தாகும்.

தமிழ் மக்கள் தம் வாழ்க்கையை, அகம்புறம் எனப் பகுத்துள்ளனர். இது 'தமிழின் துறைவாய் நுழைந்தனையோ' என்ற திருக்கோவையாரடிக்குப் பேராசிரியர், "தமிழின் துறைகளாவன ஈண்டு அகமும் புறமும் என உரைத்தமையாலும் அறியலாம். அப் பண்பட்ட நிலையில், அப்பகுதிகளுக்குரிய இலக்கணத்தையும் வரையறுத்து வாழ்ந்து வந்த பெருமை தமிழ்மக்கட்கே உரிய தனிச் சிறப்பாகும். ஏனைய மொழியினர் அறம்பொருள் இன்பம் வீடெனப் பகுத்த வெல்லாம் இவ்விரண்டினுள் அடங்கி நிற்கின்றன. உலக நிகழ்ச்சிகளை யெல்லாம் உன்னிப் பார்க்கும்போது அவை காதலும் போருமாக - ஈரச் சுவையும் வீரச்சுவையுமாக - நிற்கக் காண்கின்றோம். இதனையே நம்மனோரின் அகம் - புறம் என்ற பாகுபாடு உணர்த்தி நிற்றல் ஊன்றி நோக்குவார்க்குப் புலனாகும். விரத்திற்கும் அன்பே அடிப்படையாக அமைந்துள்ளது. எனவே, அகம் புறமென அமைந்து கிடக்கும் தமிழினத்தின் வாழ்வு அன்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளமை அறிந்தின்புறத் தக்கதாகும்.

இனி, தமிழர்தம் வாழ்க்கைப் பிரிவிற்கு அகம் புறம் எனப் பெயரிட்டதன் காரணத்தைக் காண்போம். அன்பு நெறியில் முதிர்ந்த ஒரு தலைவனும் தலைவியும் கூடி இன்புற்று வாழும் வாழ்வெல்லாம் அகம் எனப்பட்டது. இதனை, "ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாதாய்."