பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

வெனப் போற்றுகின்றார். இல்லறக் கடமைகளை, “அருந்தும் மெல்லடகு ஆரிட அருந்துமென்று அழுங்கும், விருந்து கண்டபோது என்னுறுமோ என வெதும்பும்" என்னுமடிகளில் கற்புக்கரசியாய் சீதையின் வாயிலாய்க் கம்பநாடர் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தமை காண்க.

கற்பு என்றவுடனேயே அது பெண்டிர்க்கே உரியதென நினைத்து விடுகின்றனர். அஃது ஆடவர்க்கும் ஒப்ப உரியதும், இன்றியமையாததும் என்பதை நம் அறநூல் உறுதியாக அறுதியிட்டுரைக்கின்றது. பிறர்மனை நோக்காத பேராண்மையையும், இல்லிகவா நல்லியல்பையும் வற்புறுத்துவதுடன், வரைவின் மகளிர், பெண் வழிச் சேறல் முதலியவைகளைத் தவிர்த்தலும் ஆடவர்க்குக் கற்பு வேண்டுமென்பதை வலியுறுத்தா நிற்கும். தொடக்கத்தில் தலைவன் தலைவியர் தாமே கடிமணம் புரிந்து வாழ்ந்து வந்தவராதல் வேண்டும். அத்தகு வாழ்வில், இணக்கம் நீங்கிப் பிணக்கமும், நல்லறம் நீங்கி அல்லறஞ் சேர்தலும் நிகழ ஏதுவாக, அன்பு மறந்து, அறக் கழிவு ஒரோவழி நேர்ந்திருக்கவும் கூடுமாதலால், ஆன்றோர்கள் களவில் ஒழுகிய மக்கட்குத் திருமணம் என்ற சடங்கு நிகழ்ச்சியை ஏற்படுத்திப் பலரும் அறிய இணைந்துவாழும் முறையையே ஏற்படுத்தினர். இக்கால நம்பிகளும் நங்கைமார்களும், பெற்றோர்களும், சிறப்பாகக் கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் பயின்று வரும் மாணவ, மாணவியரும் இதைக் கருதவேண்டும். தனித்துப்பேசிப் பழக வாய்ப்புக்களுள்ள இவர்கள், 'கண்டதே காதல்' என்னும் போலிப் புறக் காதல் அல்லது விலங்குணர்ச்சியாகிய காம உணர்ச்சி வயப்பட்டுத் தடுமாறிக் கூடிப் பின் பிரிந்து சென்று