பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

அறிவர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுந்த இளங்கோவடிகளின் விளங்கு காவியத்தில், தமிழ்த் திருமண முறையில் பெருமாற்றம் தலை காட்டத் தொடங்கியுள்ளது. இருநிதிபடைத்த பெருங்குடி வணிகர் மரபில், யானையின் மீது மகளிரை ஏற்றித் திருமண நிகழ்ச்சியை ஊருக்கு அறிவிக்கும் வழக்கம் வருகின்றது.

"யானை எருத்தத்து அணியிழையார் மேலிரீஇ
மாநகர்க் கீந்தார் மணம்”

எனச் சிலப்பதிகாரம் செப்புகின்றது. மேலும் நடத்துவிப்போன் ஒருவன் மணவினையில் முதன் முதல் தலைகாட்டுகின்றான். எரிஓம்பி அதனை வலம் வரும் சடங்கு போன்றவையும் தோன்றியுள்ளன. இதனை,

“மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்கண் நோன்பென்னை”

என்ற அடிகளால் அறியலாம். இனி, இடைக்காலத்து 9-10 நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு இறுதிவரை, தமிழ் நாட்டில் பல தமிழ்க் குடிகளிலும் நிலவிவந்த தமிழ்த் திருமண முறைகளை அக்காலத்தெழுந்த காவியங்களாகிய சிந்தாமணி, பெரிய புராணம், கம்ப ராமாயணம் ஆகிய காவியங்களிற் கவினுறக் காணலாம். இவை சங்ககால முறைக்கு முற்றிலும் மாறுபட்டவையாகப் போகின்றன. 'யாயும் யாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர், நீயும் யானும் எவ்வழி அறிதும்” என முன்பின்னறியாது, பிறர் கொடுப்பவும் அடுப்பவும் இல்லாது, களவியலில் மக்கள் நின்றதுபோக, பெற்றோரே முன்பின்னறியாத மணமக்களை ஒன்றுகூட்டுவிக்கும் செய்திகளை