பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

தொழில் ஒருகாலத்தில், உச்சநிலையிலிருந்திருக்கவேண்டும் என்பது புலனாகின்றது. ஆடை நெய்வதற்கு வேண்டிய நூலைப் பெரும்பாலும் கைம்மை நோன்பை மேற்கொண்டிருந்த பெண்கள் நூற்றனர். ஆகவே, அவர்கள் 'பருத்திப் பெண்டிர்' என அழைக்கப்பட்டனர். ஆடைகள் தறியினின்றும் அறுக்கப் பட்டமையால் அறுவை யென்னும் பெயர் பெற்றன. நமது உடலைச் சுற்றியிருப்பது என்ற பொருள்கொண்ட புடைவை என்னும் பெயரும் ஆடைக்கு உண்டு. இச்சொல்லானது ஆடவர், மகளிர் ஆகிய இருதிறத்தாரது ஆடையையும் குறிக்கும். இதனை சமண சமயத்தைத் தழுவியிருந்த மருள் நீக்கியார் சூலைநோயால் பீடிக்கப்பட்டிருந்தபோது, தாம் முன்பு அணிந்திருந்த பாயுடையைக் களைந்து விட்டு, வெண்புடைவை மெய்சூழ்ந்து தன் தமக்கையாரைக் காணவந்தார் என்னும் பெரியபுராணச் செய்தி விளக்காநிற்கும்.

'கலிங்கம்' என்ற சொல்லும் ஆடையைக் குறிப்பதாகும். கடையேழு வள்ளல்களில் ஒருவனான பேகன், கார் காலத்தில் மயில் ஆடுதல் கண்டு, அது குளிரால் வருந்துகிறதெனக் கருதி, தனது போர்வையையெடுத்து அதற்குப் போர்த்தினான் என்பதை,

"கானமஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய பேகன்'

என்னும் அடியினின்றும் அறியலாகும்,

கொட்டைக்கரை போடப்பட்ட உயர்ந்த பட்டாடைகள், பரிசில்பெறச் சென்ற பாணர்கட்கு, அரசர்களால் வழங்கப்பட்டன. ஆற்றுப்படைகளில் இதற்குச் சான்று காணலாம். பூவேலையுடன் கூடிய நிறமூட்டப்பட்ட ஆடைகளும் அக்காலத்தில் நெய்யப்பட்டன என்பதை,

'நீலக்கச்சை பூவாராடை'