பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

இருந்தன. அவற்றைக் கொண்டு பற்பல விதமான அணிகலன்கள் செய்யப்பட்டன. பொன்னால் அணிசெய்பவர் 'உருக்குத் தட்டார்' என்றும். பொன்னையும் மணியையும் பிரியாதவாறு இணைத்து இழைப்பவர் 'பணித்தட்டார்’ எனவும் கூறப்பட்டனர். பொன்னையும் மணியையும் சேர்த்து இழைப்பதால் அதற்கு 'இழை' என்னும் ஒரு பெயருமுண்டு. ஒன்பதுவகை மணிகளின் இலக்கணத்தை நன்கு அறிந்த பணித்தட்டார் பலர் அக்காலத்தில் இருந்தனர். வடமலையிற் பிறந்த பொன்னும், கீழ்க்கடலில் உண்டான பவளமும், தென்கடலில் கிடைத்த முத்தும், காவிரிப்பூம்பட்டினத்துக் கடைத்தெருவில் குவிந்துகிடந்தன. அவ்வாறே, பாண்டி நாட்டுத்தலை நகராம் மதுரை மாநகரத்து ஆவணி வீதியில், குற்றங் குறைபாடற்ற நவமணிக் குவியல்கள் காணப்பட்டன.

அணிகளை, குழந்தைகள் அணி, ஆடவர் அணி, மகளிர் அணி என மூன்று வகையாகப் பிரிக்கலாம். குழந்தைகட்குப் பாதுகாவலாக, 'ஐம்படைத்தாலி' என்னும் அணி, அணிவிக்கப்பட்டது. காதற் கடவுளாகிய திருமாலின் சங்கு, சக்கரம், வில், வாள், கதை முதலிய ஐந்து படைகளையும் சிறு வடிவத்தில் பொன்னால் செய்துகோத்துக் கழுத்திலிடுவார்கள். முருகனுக்கு எடுக்கப்பட்ட விழாவைக் காணும் பொருட்டு, காவிரிப்பூம்பட்டினத்தில் ஆடவரும் மகளிரும் குழுமியிருந்தனர். குழந்தைகள் அணிந்திருந்த ஐம்படைத்தாலியை, அவர்கள் வாயினின்றும் சிந்திய உமிழ்நீர் நனைத்தது என்று மணிமேகலையாசிரியர் கூறியுள்ளார். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மிகுந்த இளம் பருவத்திலேயே போர்க்களஞ் சென்றான் என்பதனை,