பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

நண்பனாம் பிசிராந்தையின் பெயரைக்கேட்ட அளவில், சோழன் மிக்க மகிழ்ச்சியடைந்து பரிசில் வழங்குவான் என்பதே அதன்பொருளாகும்.

பழங்காலத்திலிருந்த அணிகலன்களிற் பல இக்காலத்தில் இல்லை. அப்படியிருப்பவற்றின் பெயரும் சரியாகத் தெரியவில்லை, நாட்டியக்கலையை ஆதரித்து வருபவர், பழைய அணிகளுள் கிடைத்தவற்றைப் பாதுகாக்கின்றனர். ஏனெனில், அவ்வக்காலத்து ஆடல் பாடல்களை நிகழ்த்துகையில், அவ்வவற்றிற்கேற்ற ஆடையணிகள் அணிதலே ஏற்புடைத்து. வாளைமீனின் அங்காந்த வாய்போன்ற நெளிமோதிரமும், அகலக்கரை போடப்பட்ட ஆடைகளும் தொன்மையைக் குறிக்கும் என்பர்.

ஒரு காலத்தில், நம்நாட்டு ஆடைகள் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பாண்டிநாட்டு முத்தானது, உரோமாபுரி, எகிப்து போன்ற நாட்டு மன்னரது முடியை அலங்கரித்ததாக, யாத்ரீகரது குறிப்பில் காணப்படுகிறது. அத்தகைய தமிழ்நாடு பிறநாடுகளினின்றும் ஆடையை எதிர்பார்த்து ஏங்கி நிற்கவேண்டிய நிலை சமீபகாலம் வரையில் ஏற்பட்டிருந்தது. அதற்குக் காரணம், தமிழர் நெசவுத் தொழிலை இடையில் செய்யாது விட்டுவிட்டதே யாகும். அத்தொழிலானது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. பெருத்த ஆதரவும் அதற்கு அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, 'உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்னும் அமரகவி பாரதியாரின் பொன் மொழியை அனைவரும் கருத்தில் இருத்தி, தொழில்செய்ய முற்படுவாராயின், நெசவுத்தொழில் மீண்டும் பழைய உன்னத நிலையை அடையும் என்பது ஒருதலை.