பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

சென்று வாணிகம் செய்தனர். அக்கூட்டம் 'வாணிகச் சாத்து' எனப்பட்டது. தமிழ் வேந்தர்களும் இவ்வணிகர்க்குத் தக்க பாதுகாப்பளித்தனர். இவர்கள் தமிழகத்தின் வட எல்லையாகிய வேங்கடத்தைக் கடந்து தெலுங்கு, கன்னட நாடுகளிலும் அவற்றுக்கு அப்பாற்பட்ட நாடுகளிலும் சென்று வாணிகம் செய்தனர். அறிவிற் சிறந்த தமிழரசர் வாணிகத்தைத் திறம்பட நடத்திய வணிகர்க்கு 'எட்டி' என்ற பட்டத்தையும் பொற்பூவையும் அளித்துச் சிறப்பித்தனர். சேரர் தலைநகரான வஞ்சிமாநகர், பாண்டியர் கோநகரான மதுரை, சோழர் தலைநகரான பூம்புகார் என்ற பெருநகரங்களில் இருந்த பெரிய கடைத்தெருக்களில் அயல்நாட்டுப் பண்டங்கள் குவிந்து கிடந்தன. அக்கடைத் தெருக்களில் இன்னின்ன பொருள்கள் விற்கப்பட்டன என்பதைச் சிலப்பதிகாரமும பிறவும் சிறப்புறக் கூறுகின்றன.

உணவு

குறிஞ்சி நிலமக்கள் மலைநாட்டு விளை பொருள்களை உணவாகக் கொண்டனர். மலைநாட்டுப்பொருள்கள் இன்னவை என்பதைச் சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் காட்சிக் காதை நன்கு தெரிவிக்கின்றது. முல்லை நிலத்து ஆயர், பால், தயிர், வெண்ணெய் முதலியவற்றை மருத நிலத்தில் விற்றுத் தமக்கு வேண்டும் உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொண்டனர், மருதநிலத்து மக்கள் நெற்சோற்றையும், பலவகைக் காய்களையும், கனிகளையும் உண்டு வந்தனர். நெய்தல் நில மக்கள் பிற நிலத்தாருடன் மீன் வாணிகம் செய்து தமக்கு வேண்டும் உணவுப் பொருள்களைப் பெற்றனர். இங்ஙனம் நானில மக்களும் தத்தம் நிலத்தில் விளையாத பொருள்களைப் பிறரிடம் பெற்று வாழ்ந்து வந்தனர்.