பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


நடன அரங்கின் மேற்கூரையில் பலவகை ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. கட்டடச் சுவர்கள் மீது தேவர், மக்கள் ஒவியங்களையும் பல கதைகளை விளக்கும் கண்கவர் ஒவியங்களையும் தீட்டுதல் தமிழர் மரபு. அக்காலத்தார் ஒவியங்களை அமைத்துப் பல ஆடைகளை நெய்து வந்தனர். அக்காலத்தில் ஒவியக்கலை பற்றிய நூல் வழக்கிலிருந்தது. அதனை நாடக மகளிரும் நன்கு பயின்று வந்தனர். கோவில் மண்டபங்களில் புராண இதிகாச நிகழ்ச்சிகளைக் குறிக்கும் ஒவியங்கள் தீட்டப்பட்டிருந்தன.

சிற்பக் கலை

போரில் தன் ஆற்றலைத் தோற்றி விழுப்புண் பட்டு இறந்த வீரனுக்கு அறிகுறியாக ஒரு கல்லை நட்டு, அதனில் அவனது உருவத்தைப் பொறித்தல் தமிழ்நாட்டு வழக்கம் இதனைச் சிற்பக் கலையின் தொடக்கமென்று கூறலாம். கண்ணகியின் சிலை அமைக்கப்பட்டதைக் கொண்டும் இதனை உணரலாம். சங்ககாலக் கோவில்களில் பல தெய்வ உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுதை கொண்டு உருவங்களை அமைக்கும் பண்ணிட்டாளரும், கல்லில் உருவங்களை அமைக்கும் சிற்பத் தொழிலாளரும் சங்க காலத்தில் வாழ்ந்தனர்.

இசைக்கலை

இசைத் தமிழ் சங்க காலத்தில் நன்கு வளர்க்கப்பட்டது. பெரநாரை, இசை நுணுக்கம் முதலிய இசைத் தமிழ் இலக்கண நூல்களும், சிலப்பதிகாரம், பரிபாடல், கலித்தொகை போன்ற இசைத் தமிழ்ச் செய்யுள் நூல்களும் சங்க காலத்தவை. குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம் என்னும் ஏழு