பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59


சமய நிலை

பழந்தமிழ் மக்கள் கடவுள் நமபிக்கையுடையவர். ஒவ்வொரு பேரூரிலும் பலவகைக் கோவில்கள் இருந்தன. சைவம்,வைணவம், பெளத்தம், சமணம் பற்றியகோவில்கள் விளங்கின.மக்கள் தமக்கு விருப்பமான சமயக் கொள்கைகளைப் பின்பற்றினர்.கோவில்களில் விழாக்கள் சிறப்புற நடைபெற்றன. விழாக்களில் ஆடல் பாடல்கள் நிகழ்ந்தன. சமயவாதிகள் ஒருவரோடொருவர் பூசலிடாமல் தத்தம் சமயத்தைப் பரப்பி வந்தனர்.

நாகரிகத்தின் உயர்வு

மக்கள் தாம் வாழும் குடும்பத்தையும், சமுதாயத்தையும், நாட்டையும்,உலகையும் தம் வாழ்வுக்குத் தேவையான பிறவற்றையும் அறியவும், அறிந்து நல்வழியில் நடக்கவும் கல்வி இன்றியமையாதது. பழந்தமிழ் மக்கள் கல்வித் தெளிவினால் பயிர்த் தொழில் போன்ற பல தொழில்களைத் திறம்படச் செய்தனர்; வாணிகத்தை வளம்பெற நடத்தினர்;'யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற உயர்ந்த கொள்கையைப் பின்பற்றினர்; தொழிலிலும் வாணிகத்திலும் அறநெறி தவறாது நடந்தனர். “தீதும் நன்றும் பிறா தர வாரா" (மனிதன் ஆவதும் அறிவதும் தன்னாலேதான்) என்னும் விழுமிய கருத்தை அழுத்தமாக உணர்ந்து நடந்தனர்; கட்டடக் கலையிலும், இசை, கூத்து போன்ற நுண்கலைகளிலும் பண்பட்டு இருந்தனர்; உண்மையுடைமை, ஒழுக்கமுடைமை, அன்புடைமை, அருளுடைமை முதலிய நற்பண்புகளைப் பெற்று நலமுற வாழ்ந்தனர். சுருங்கக் கூறின், சங்ககாலத் தமிழ் மக்கள், “வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தனர். இங்ஙணம் வையத்து வாழ்வாங்கு வாழ்பவரே'நாகரிக மக்கள் என்று அறிஞர் கூறுவர்.