பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60


6. பழந்தமிழர் சமயம்


சைவ சித்தாந்தக் கலாநிதி,

பேராசிரியர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை

தியாகராஜர் கல்லூரி

பழந் தமிழர் என்ற சொற்றொடர் நம் கண்ணிலும் காதிலும் பட்டவுடனே நமது நினைவு தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் ஆகிய நூல்கள் எழுந்த காலத்துக்கு நம்மைக் கொண்டு செல்லுகிறது. அக்கால மக்களின் வாழ்க்கைக் கூறுகள் நம்மனக் கண்ணில் தோன்றுகின்றன. அவர்களின் சமய உணர்வு ஒழுக்கங்களை உணர்தற்கெனச் சில சொற்களும் சொற்றொடர்களும் சிறந்த சான்றுகளாக அக்கால நூல்களில் நின்று நம் அறிவைப் பணி கொள்கின்றன. அந்நாளைய கல்வெட்டுக்களோ ஒவச் செய்திகளோ பிறவோ கிடைக்கவில்லை நல்லிசைப் புலமைச் சான்றோர் சிலர் அவ்வக்காலத்தில் பாடிய பாட்டுக்கள் சிலவற்றைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனப் பண்டையோர் தொகுத்துள்ளனர். அவை பலவும் தேர்ந்து கொள்ளப்பட்ட ஒரு சில சான்றோர்களின் சிலவும் பலவுமாகிய பாட்டுக்களாதலால் அவற்றைக் கொண்டு வரலாற்று முறையில் வைத்துச் சமய உண்மைகளைக் காண்பது அரிதாகவுளது.