பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

அறிந்தன. கடவுள், இயவுள் என்ற சொற்கள் கடத்தல், இயக்குதல் என்ற பொருட்குரியன. அக்குள் விக்குள் என்றாற் போல இவையும் கடவுள் இயவுள் என்று இயலுவதால், உள்ளும் புறமும் கடந்து நிற்பது, இயக்கி நிற்பது என்று பொருள்பட்டுக் கடவுள் எனப்படும் முதற் பொருள் என்பது எல்லாப் பொருட்கும் உள்ளும் புறமும் கலந்து நின்று இயக்குவதும், அவற்றைக் கடந்து நின்று அவற்றின் செயல் முறைகட்கு ஆணை செலுத்துவதும் செய்தொழுகுவது என்ற கருத்தை உணர்த்துகின்றன.

இக்கடவுட் கொள்கைக்கு நிலைக்களம் உயிரும் உலகமும் ஆகும். உலகமாவது,'நிலம் தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் என்பது தொல்காப்பியம். சமயச் சூழ்நிலையில், காலம் உலகம் உயிரே உடம்பே, பால்வரை தெய்வம் வினையே பூதம், ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம் ஆயிரைந்தும் சிறந்த பொருள்களாக நிற்கின்றன. உயிர்கள் புல் பூண்டுகளாகிய ஓரறிவுயிர் முதல் மக்கள் ஈறாக ஆறு வகையாகப் பிரிகின்றன. இவ்வுயிர்கள் யாவும் “மன்னுயிர்” என்றும் “தொல்லுயிர்” என்றும் சிறப்பிக்கப் படுவதால் அவை கடவுளாகிய முதற் பொருளால் படைக்கப்படாமல் அப்பொருளே போல என்றும் நிலை பேருடைய உள்பொருளாகும். ஏனை உலகமும் உலகிலுள்ள பொருள்களும் அம்முதற் பொருளால் படைக்கப்படுவனவாம். கடவுளை முதற்பொருள் என்று குறிப்பதோடு, “உலகு இயற்றியான் எனவும், "உலகு படைத்தோன்”(நற்.240) எனவும் குறித்திருப்பது இக்கருத்துப் பற்றியேயாம்.

உயிர்கள் இன்ன உரு இன்ன நிறம் என்று சொல்ல வொண்ணாத உருவுடையன; ஆயினும் அவை உலகியற் பொருள்களான உடம்பையும் ஏனைப் பொருள்களையும்