பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தீவினை. நல்வினை செய்தோர் இன்பத்துக்கும் தீவினை செய்தோர் துன்பத்துக்கும் உரியவராவர். வினை உயிரோ. உணர்வோ இல்லாததாகலின், அது தானே சென்று வினை செய்தவனுக்கு உரிய பயனை நல்குவதில்லை. வினை செய்தோனுக்கு வினைப் பயன் அவனையே அடைதற்குரிய தொழிலைச் செய்யும் வகையில் தெய்வங்கள் பணி புரிகின்றன. அதுபற்றியே அவற்றைப் பால்வரை தெய்வம் என்று சான்றோர் குறிக்கின்றனர். செய்யப்படும் வினைப் பயன்களுக்கேற்ப உயிர்கட்கு இம்மை மறுமை வீடுபேறு என மூவகையுலகுகள் காட்டப்படுகின்றன. வினை செய்தற்குரிய உலகம் நாம் வாழும் மண்ணுலகம். நல்வினைப் பயனை நுகர்தற்குரிய மறுமை உலகம் நிரயம் என்றும் வினைத் தொடர்பினின்றும் அறவே நீங்கி விளங்கும் அறிவுடைச் சான்றோர்க்குரியது வீடு பேறு என்றும் பழந்தமிழர் கருதினர்.

வினை தோன்றும் போதே அதன் பயனும் உடன் தோன்றுகிறது. வினை முடிவில் அதன் முழுத்த பயன் உருவாகி வினை செய்த ஒருவனை அடையும் நிலையை எய்துகிறது. அவன் அப்பயனை நுகரும் வரை அவனுக்கு அஃது ஊழ்கனிபோல் நின்று நுகர்ச்சிக்குரிய காலம் வந்ததும் தெய்வத்தின் ஆணையால் அவனை எவ்வகையாலேனும் அடைந்து விடுகிறது. அதனால் அதனை ஊழ்வினை என்று அறிஞர் அறிவிக்கின்றனர் ஊழ்வினையை ஊட்டுவிக்கும் பணி கடவுட் பொருளின் ஆணைவழி இயங்கும் தெய்வங்களின் செயலாதலால், தெய்வ வழிபாட்டால் வினைப்பயனது நுகர்ச்சி காலவகையில் வேறுபடும் என்ற கருத்துப் பண்டையோர் கொண்டிருந்தனர். குன்றவ முருகனுக்கு வழிபாடாற்றி வேட்டம் செல்வதும், ஆய