பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

மாயோனுக்குக் குரவையாடி வழிபாடு பற்றுவதும், வேளாளர் இந்திர விழா எடுத்தலும், பரதவர் சுறவுக்கொடு நட்டு வருணனுக்கு வழிபாடு செய்து மீன் வேட்டம் புரிவதும், கொற்றவையை வழிபட்டு எயினர் மறத்தொழில் செய்வதும் சங்க இலக்கியங்களில் காணப்படுவது இது பற்றியே யாகும்.

உலக வாழ்வில் காணப்படும் உயிர்கள் அனைத்துக்கும் இன்பம் பெறுவது ஒன்றே குறிக்கோளாகும்.

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பதுதான் அமர்ந்து
வருஉம்மே வற்றாகும்"

என்பது தொல்காப்பியம். இந்த இன்பப்பயன் பெறுவது குறித்தே உலக வாழ்வு நடைபெறுகிறது; உயிர்களால் செய்யப்படும் வினைகள் யாவும் இக்குறிக்கோளையே நாடி நிற்கின்றன. இந்த இன்பப் பயன்பெறுவது பற்றித் தோன்றும் வினை இடையீடு படுமிடத்தும் இடையூறு எய்துமிடத்தும் அவற்றை நீக்கும் செயல்வகைகளில் மக்களின் அறிவும் முயற்சியும் பெரிதும் ஈடுபடுகின்றன. இடையிடும் இடையூறும் அவ்விரண்டின் எல்லையைக் கடந்து போகிறபோது சமயவுணர்வும் வழிபாடும் தோன்றுகின்றன. பெரு மழை, மழையின்மை, கடுங்காற்று, கொடு விலங்கு, பெரும் பகை முதலியவற்றால் இடையூறு உண்டாகுமாயின் மக்கள் தெய்வ வழிபாட்டில் சிறந்து நிற்கின்றனர். பெருமழைக்கு வருந்திய மலையுறை குறவர்,

"மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய்
மாரி யான்று மழைமேக் குயர்கெனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்

பெயல்கண் மாறிய உவகையர்”
(புறம்.143)