பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

மேற்கோடல் என்பது தமிழர் சமயக் கொள்கைக்குப்புறம்பானது. இச்சான்றோர் இன்பமும் துன்பமுமாகிய இரண்டினையும் ஒரு சேரவுவர்ந்து வினையின் நீங்கி விளங்குபவராதலின், இவர்கட்குத் தெய்வ வழிபாடு கிடையாது. இவர்களால் வழிபடப்படுவது கடவுள் எனப்படும் முழுமுதற் பொருளேயாகும். அதனால் இத்துறவிகளையும் கடவுளர் என்பது பழந்தமிழ் மரபாயிற்று. சடை முடித்துப் பலகாலும் நீராடித் தோலுடுத்துக் காய்கனி கிழங்கு இலைகளை உண்டு காடும் குன்றுமாகிய இடங்களில் வாழ்வது துறவோர் நிலைமையாகும். இவர்கள் ஏனையோர் போல நல்வினை செய்து துறக்கவின்பம் பெற விழையாது உற்ற நோய் பொறுத்தலும் உயிர்கட்கு ஊறு செய்யாமையுமாகிய தவம் மேற்கொண்டு மெய்யுணர்ந்து அவாவறுத்து ஒழுகுவர். இப்பெருமக்களது வாழ்வு முழுதுமே சமய நெறியில் இயங்குதலால், இவர்கட்கெனத் தனி நிலையில் சமய வாழ்வும் வழிபாடும் இல்லை. இவர்கள் சொல்லுவனவும் நினைப்பனவும் யாவுமே கடவுட் பெரும் பொருளோடு கலந்து பிரிப்பின்றிப் பிறங்கும். இவர்கள் நெஞ்சின்கண் நின்று நிலவும் கடவுள், “பால்புரை பிறை நுதல் பொலிந்த சென்னி, நீலமணிமிடற்றுப்" பெரும் பெயர்க் கடவுள், முற்றுந் துறந்த முனிவரும் முடியுடைய மூவேந்தரும் தலைசாய்த்து வணங்கியது இக்கடவுளையேயாகும். "பணீஇயர் அத்தை நின்குடையே முனிவர் முக்கட் செல்வ நகர் வலம் செயற்கே' என்று சான்றோர் தெருட்டுதல் காண்க.

முழுமுதற் கடவுட்கும் மண்ணுலக உயிர்கட்கும் இடையே நிலவும் தெய்வங்கள், மக்களுடைய வழிபாட்டையேற்று அவர்கள் நலம் பெறத் துணைபுரியும் என்ற கருத்தால் பகைப்பொருளை