பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

சிலவற்றை நாள்தோறும் காலந்தவறாது செய்கின்றார்கள். அவர்கள் வீட்டைவிட்டு இரயிலில் கப்பலில் பயணம் சென்றாலும், வீதிகளில் நடந்து சென்றாலும், வியாபாரம் செய்து கொண்டிருந்தாலும், வேறெங்கும் அலுவல் பார்த்துக் கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் வழிபாடு செய்கின்றார்கள். நம்மவர்கள் அவர்களைப் பார்த்து, நாகரிகம் தெரியாதவர்கள் என எண்ணுகிறார்கள். இஸ்லாமானவர்கள் நம்மைவிட வலிவானவர்களாகவும் நோய் குறைந்தவர்களாகவும் காணப்படுவதற்கு அவர்கள் கொண்டுள்ள இந் நற்பழக்கமே காரணமாகும்.

மந்திரம்

மனத்தை உரப்படுத்துவது, அலையு மனத்தை அகத் தடக்குவது, ஒரு நாமத்தையோ, ஒர் உருவத்தையோ இடையறாது நினைப்பது மந்திரம். சிவாயநம வென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளுமில்லை என்பர் பெரியோர். காலை, நண்பகல், மாலை மூன்று வேளையும் மந்திரம் செபிக்கப்பெறும். தனித்திருந்து கண்ணை மூடிக்கொண்டு கருத்தை ஒன்றில் நிறுத்த உதவுவது மந்திரம். மந்திரத்துக்கும் மூச்சுக்கும் தொடர்புண்டு. மூச்சுப் பயிற்சி மந்திரத்தோடு செய்யப்பெறும்.

திருமந்திரம்


நாசிக்கு அதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்யும்
தேகத்திற் கென்றும் சிதைவில்லை கானே