பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93



அக்காலத்தில் தமிழ் மருத்துவர்கள் தேக தத்துவ நூல், நோயைப் பற்றிய நூல், நோயனுகா விதி, இரணமருத்துவம், உணவுப் பொருள் மருத்துவ நூல், விஷங்களை நீக்கும் நஞ்சு நூல், ஞானசர நூல் சோதிட நூல் முதலிய பல நூல்களைக் கற்றறிய வேண்டியதோடு ஆசிரியனோடு 12 ஆண்டு பழகவேண்டும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல்தான் தனியே மருத்துவம் செய்யவேண்டும் என விதியிருந்தது. இப்போது அப்படிச் செய்கிற தமிழ் மருத்துவரும் இல்லை; செய்விக்கிற திட்டங்களும் இல்லை. மருத்துவத் துறையிலும் வெளிநாட்டு மருத்துவ முறைகளுக்கே ஆக்கமும் விளம்பரமும் மிகுந்து விட்டன.

பிணி அறிதல்

பழைய தமிழ் மருத்துவர்கள் நோயாளரைச் சோதித் தறியும்போது நோய் வந்ததற்குக் காரணத்தை முதலில் காண்பார்கள். பலதரப்பட்ட மக்களுக்கு அவரவர் நிலத்தியல்பு, உணவு, கல்வி, அறிவு செய்தொழில் ஆகியவற்றைக் கவனித்தும்,

"நாடியால் முன்னோர் சொன்ன நல்லொலி பரிசத்தாலும்
நீடிய விழியினாலும் நின்ற நாக்குறிப்பினாலும்
வாடிய மேனியாலும் மலமொடு நீரினாலும்
சூடிய வியாதிதன்னைச் சுகமுடன் அறிந்துபாரே"

என்றபடி கைநாடி, குரலொலி, உடற்சூடறியத் தொடுதல், கண், நாக்கு, உடம்பின் நிறம், நீர், மலம் இந்த எட்டுவிதச் சோதனையின்றி மருந்து கொடுக்க மாட்டார்கள்.