பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருத்துவன் தாமோதரனார், மலையனார் முதலியோர் தமிழ் மருத்துவர்களென்றே தெரிகிறது. தமிழரசனுக்கு மருத்துவரா யிருந்த பரஞ்சோதியார் அரசனுக்கு அணுக்கராகவும் படைத் தலைவராகவுமிருந்து வடநாட்டு வாதாபி மன்னன் இரண்டாம் புலிகேசி தமிழரசனுக்குக் கப்பம் கட்டாதிருந்த காலத்தில் படையொடு சென்று அவனைப் பணியச்செய்து வெற்றிகண்டு வந்தார் எனச் சரித்திரமிருக்கிறது. அக்காலத்தில் கல்வி அறிவில் சிறந்த பெரியோர்கள் மருத்துவராயிருந்தார்கள். இக்காலத்தில் கல்வி அறிவில்லாதவர்களும் பரம்பரையாய்க் குருகுல முறைப்படி தமிழ் மருத்துவ நூல்களைக் கற்றுத் தக்க ஆசிரியனிடத்தில் பழகி அனுபவமில்லாதவர்களும் தமிழ் மருத்துவம் செய்கிறபடியால் அலட்சியப்படுத்துகிறார்கள். மேற்கூறிய குறைகள் தீர்ந்து மக்களுக்கு நோய் குறைந்து முற்காலம்போல் நோயின்றித் தேகபலத்தோடு நூறாண்டு நலமாய் வாழ வேண்டுமாயின் செல்வர்களும் அரசினரும் தமிழ் மருத்துவக் கல்லூரி நடத்தவேண்டும். இக்காலத்தில் ஆங்கில மொழிக்கும் ஆங்கில அறுவை மருத்துவத்துக்கும் அதிக சலுகை காட்டப்படுகிறது. தமிழ் நாட்டில் சித்தர்கள் முறையாகிய தமிழ் சித்த மருத்துவக் கல்லுரி ஒன்றாவது சரியாய் நடைபெறச் செய்யவேண்டும். சித்த மருத்துவக் கல்லூரிக்கு முதல் சலுகை காட்ட வேண்டும். மக்கள் நோய் குறைந்து நலமாய் வாழ வேண்டும்.


—————————❖—————————