பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுகூடி அமைத்திருக்கும் உலகப் பேரவை ஆட்சிபுரியும் இக்காலத்திலும்,ஒரு சில நாடுகளில்,மக்கள் ஆட்சியை அழித்துவிட்டு மறவர் ஆட்சி இடம் பெற்று விடுகிறது என்றால்,இக்காலம் போலும் அரசியல் விழிப்புணர்ச்சி வாய்க்கப் பெறாத பண்டைக் காலத்தில், படை மறவர் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப வேந்தர்களின் ஆட்சி வாழ்வதும் வீழ்வதும் ஆகிவிடுவது மிகமிக எளிதாக இயன்றிருக்கும்.

கோலாந்தியவன் தளர்நிலை நோக்கி, வேலேந்தியவன் வேந்தனாகி விடுதலும், அரியணேயில் அமர்ந்திருப் போனின் ஆற்றல் இன்மை அறிந்து, அமர்க்களத்தில் நிற்போன் ஆட்சியைக் கவர்ந்து கோடலும் கூடும் என்பதை உணர்ந்திருந்தமையால்,படை அமைத்து,அப்படைக்கு ஒரு தலைவனைத் தேர்த்தெடுக்குங்கால்,அப்படைத் தலைவன்பால் உள்ள ஆண்மை,ஆற்றல்களை ஆராய்ந்து நோக்குவதன் முன்னர், அவன்பால் அமைந்துகிடக்கும் பண்புடைமையினை ஆராய்வதிலேயே அக்காலக் காவலர் தம் கருத்தினைப் போக்கி இருந்தனர்.

பழி பாவம் கண்டு நடுங்கும் கல் உள்ளமும்,தம் நாட்டவர்க்கும், தம் நாடாளும் தலைவர்க்கும் நன்மையே பயக்கும் கல்லுரைகளே யல்லது வல்லுரை வழங்கா வாய்மையும், பகையரசர், பொன்னேயும் பொருளையும் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுப்பினும் தம் நாட்டு வேந்தனுக்குக் கேடு புரியாமையும், வேந்தன் தமக்குத் தரவேண்டிய தண்ணடை முதலாம் பொருட் செல்வத்தையும், ஏனாதிப் பட்டம் போலும் புகழச் செல்வத்தையும் தரத்தவறிய போதும் தம் கடமையில் தவறாமையும் போலும் நல்லொழுக்கம் படைத் தலைவர்பால் பொருந்தி யிருக்க வேண்டும் என விரும்பினர்கள் அன்று பாராண்ட பேரரசர்கள்.